Published : 30 Jun 2019 08:50 AM
Last Updated : 30 Jun 2019 08:50 AM

இந்தோனேசியாவில் தமிழ் கலாச்சாரம்!- பாரம்பரியத்தை பாதுகாக்கும் தமிழ்ச் சங்கம்

கங்கை கொண்ட சோழனான ராஜேந்திர சோழன் 11-ம் நூற்றாண்டில் படையெடுத்துச் சென்ற நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று. அன்றிலிருந்து இன்றுவரை தமிழர்களுடனான தொடர்பு இன்னும் அந்நாட்டில் தொடர்கிறது. குறிப்பாய், இந்தோனேசிய தமிழ்ச் சங்கம், தமிழர்களின் மொழி, கலாச்சாரம், பண்பாட்டைப் பாதுகாத்து, அவற்றை வருங்கால சந்ததியினரிடம் கொண்டுசெல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த சங்கத்தின் தலைவராக இருக்கும் ஆர்.ரமேஷ் (58), கோவையைச் சேர்ந்தவர் என்பது கொங்கு மண்டலத்துக்கு பெருமை சேர்க்கும் தகவல். அண்மையில் கோவை வந்திருந்த ரமேஷை சந்தித்தோம்.

“பெற்றோர் ராமச்சந்திரன்-ஜெகதாம்பாள். அப்பா ஓய்வுபெற்ற வங்கி ஊழியர். சபர்பன் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு, பிஎஸ்ஜி கலைக் கல்லூரியில் பியுசி-யும்,

பி.ஏ.வும் பயின்றேன். சென்னை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்துவிட்டு, கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தேன். பின்னர் இந்தியப்  போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றினேன்.

1986-ல் திருமணம். மனைவி ஹேமா. மகன்கள் விக்னேஷ், விஷால். 1987-ல் இந்தோனேசியாவின் தலைநகரம் ஜகர்த்தாவில், தமிழரான மாரிமுத்து சீனிவாசன் நடந்தி வந்த ஜவுளி நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் சேர்ந்தேன்.  ஏறத்தாழ 31 ஆண்டுகளுக்கும் மேலாக ஜகர்த்தாவில் பணிபுரிகிறேன்.

இந்தோனேசியாவைப் பொறுத்தவரை, ஜப்பானியர்கள், சீனர்கள், கொரியர்கள், இந்தியர்கள் அதிகம்  பேர் உள்ளனர். கடின உழைப்பு, அறிவுத்திறன், நம்பகத்தன்மை காரணமாக இந்தியர்களுக்கு பெரிய மரியாதை இருக்கிறது. இயற்கை வளம் மிகுந்த இந்தோனேசியாவில் கனிம வளமும் அதிகம் உண்டு. தேயிலை, காபி மற்றும் வேளாண் பொருட்கள், பட்டை, கிராம்பு உள்ளிட்ட வாசனைப் பொருட்கள், முந்திரி, பனை மரங்கள் உள்ளிட்டவை அதிகம் உள்ளன.

இந்தியர்களுக்காக தேசிய அளவில் `இந்தியா கிளப்’ என்ற அமைப்பு செயல்படுகிறது. எனினும், அதில்  பெரும்பாலும் இந்தி நிகழ்ச்சிகள்தான் நடத்தப்படும். 1990-களில் டிவி-யில் தமிழ் சேனல்களைப் பார்க்க முடிந்தபோதும், நேரடியாக தமிழ் நிகழ்ச்சிகளைப் பாரக்க முடியவில்லை என்ற ஏக்கம்  இருந்தது. அந்த சமயத்தில் ஜகர்த்தா நகரில் மட்டும்

500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இருந்தோம். அப்போது ஒருவர் தமிழர்களுக்கான அமைப்பைத் தொடங்கியபோதும், அவரால் தொடர்ந்து நடத்த இயலவில்லை.

2010-ம் ஆண்டில் நான்கைந்து பேர் ஒன்றுகூடி, தமிழர்களுக்காக பிரத்தியேகஅமைப்பைத் தொடங்குவது குறித்து ஆலோசித்தோம். 2011 ஜூலை 23-ம் தேதி இந்தோனேசிய தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. தற்போது 400-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும், பதிவு செய்யாத நிறைய உறுப்பினர்களும் உள்ளனர்.

இந்தோனேசிய தமிழ்ச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் 3 முக்கிய நிகழ்ச்சிகளை   நடத்துகிறோம். ஆகஸ்ட் மாதத்திலிருந்து அக்டோபர் மாதத்துக்குள் சங்கத்தின் ஆண்டு விழாவை விமரிசையாக நடத்துகிறோம். இயல், இசை, நாடகத்துக்கு முக்கியத்துவம் அளித்து, பட்டிமன்றம், நாடகம்,  நடனம், நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.

அடுத்து, பொங்கல் விழாவை வெகு சிறப்பாக நடத்துகிறோம். தமிழகத்திலிருந்து சிறப்பு பேச்சாளரை வரவழைத்து, சொற்பொழிவு, சங்க உறுப்பினர்கள் குழந்தைகளின் திறனை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். மண் பானைகளில் பொங்கல் வைத்து, சூரியனுக்குப் படையலிட்டு, வழிபாடு நடத்துகிறோம். மாடு கிடைக்காது என்பதால், வண்டியில் குதிரையைப் பூட்டி உலா நடத்துகிறோம். எல்லோருக்கும்

வாழை இலையில் பாரம்பரிய உணவு வழங்குகிறோம். கடந்த இரு ஆண்டுகளாக பந்தியில் தம்பதியை அமரவைத்து, ஒரே இலையில் சாப்பிட வைக்கிறோம். குறைந்தபட்சம் 40, 50 தம்பதிகள் இதில் பங்கேற்பர். சமையல்காரரை சிங்கப்பூரில் இருந்துவரவழைக்கிறோம்.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு `சங்கமம்’ என்ற விழாவை நடத்துகிறோம். தமிழகத்தின் பாரம்பரிய உணவுக் கண்காட்சி இதில் சிறப்பாக இருக்கும். மேலும், மதுரையிலிருந்து பொய்க்கால் குதிரை, காவடி, மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம். நெருப்பு நடனம், சிவன்-பார்வதி ஆட்டம், பேயாட்டம் ஆடும் கிராமப்புறக் கலைஞர்களை வரவழைத்து, நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். புலம் பெயர்ந்து வந்த தமிழர்களின் குழந்தைகள், தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம் குறித்தெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதே இந்த விழாவின் நோக்கம்.

இதில், உறியடி விளையாட்டு, நடனம், பேச்சு, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் உண்டு. தமிழர்கள் மட்டுமின்றி, இந்தோனேசியாவில் வசிக்கும் வெளி மாநிலத்தவர், பிற வெளிநாடுகளைச் சேர்ந்தவர், நண்பர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்துகொள்வர். நாங்கள் நடத்தும் எல்லா நிகழ்ச்சிகளிலும் இந்திய நாட்டுத் தூதர் பங்கேற்றாலும், சங்கமம் நிகழ்ச்சிக்கு அவர்தான் சிறப்பு விருந்தினர்.

இந்தோனேசியாவில் தமிழ் சினிமாக்கள் திரையிடப்படாமல் இருந்தது. பாலிவுட் சினிமாக்கள் மட்டும்தான் அங்கு வரும். எனவே, நாங்கள் முயற்சித்து, தமிழ் சினிமாக்களை திரையிடுகிறோம். கடந்த 5, 6 ஆண்டுகளாக, ஒவ்வோர் ஆண்டும் 2, 3 படங்களை திரையிடுகிறோம். இதற்காக விநியோக உரிமையையும் வாங்குகிறோம். அதிகபட்சம் 4 காட்சிகளில், 600 பேர் வரை தமிழ்ப் படத்தைப் பார்க்கிறார்கள்.

புலம் பெயர்ந்து வந்துள்ள குழந்தைகளின் கல்வி, மருத்துவத்துக்காக உதவுகிறோம். இந்தோனேசியாவில் `பஹாஷா இந்தோனேசியா’ என்ற மொழி பேசுகிறார்கள். கிட்டத்தட்ட மலாய் மொழிபோல இது இருக்கும். பள்ளிகளில் தமிழ் கற்றுக்கொடுப்பதில்லை. இதனால், இந்தோனேசிய தமிழ்ச் சங்கம் சார்பில், வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக தமிழ் வகுப்புகள் நடத்துகிறோம். தன்னார்வலர்களே வகுப்புகளை நடத்துகின்றனர். எனினும், பேச, எழுத என அடிப்படைத் தமிழை மட்டும்தான் கற்றுத் தருகிறோம். புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழை மறக்கும் நிலை உள்ளது. எனவேதான், தமிழ் வகுப்புகளை நடத்துகிறோம். மூன்று வயது முதல் 30 வயது வரையிலானவர்கள்  தமிழ் பயில்கிறார்கள்.

ஜகார்த்தாவில் உள்ள ஜவகர்லால் நேரு இந்திய கலாச்சார மையத்தில், தமிழ்ச் சங்கத்தின் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2012-ல் வகுப்புகள் தமிழ் வகுப்புகள் அடிப்படை தமிழ் கற்றுத் தருகிறோம். இதேபோல, எதிர்பாராதவிதமாக சிலருக்கு உடல்நிலை சரியில்லாமல்போகும்போது, மருத்துவ உதவிகளும் செய்கிறோம். 2015-ல் தமிழகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, நிதி திரட்டி அளித்தோம். தமிழறிஞர்களுக்கு பண உதவியும் செய்துள்ளோம்.

புலம் பெயர்ந்து சென்றாலும், தமிழ், பாரம்பரியம், கலாச்சாரம் வழிவழியாகத் தொடர வேண்டுமென்பதே எங்கள் அமைப்பின் பிரதான நோக்கம். இதில், 13 செயற்குழு உறுப்பினர்கள் இருக்கிறோம். ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் ஆண்டு விழாவையொட்டி மலர் வெளியிடுகிறோம். அதில், தமிழில் கட்டுரைகளை வாங்கி வெளியிடுகிறோம்.

இந்தோனேசியாவைப் பொறுத்தவரை, இந்தியர்களை நன்றாக மதிக்கின்றனர். பெரிய அளவுக்குப் பிரச்சினைகள் எதுவுமில்லை. திறன் மிகுந்தவர்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. சோழர் காலத்திலிருந்து கலாச்சாரத் தொடர்புகள் இருக்கின்றன. நேரு பிரதமராக இருந்தபோதே, இந்தியர்களுக்கு மிகுந்த மரியாதை கிடைத்தது. நிறைய பேர் முஸ்லிமாக மாறினாலும்,  சரஸ்வதி, விஜயா என்றெல்லாம் பெயர் வைத்துக்கொள்கிறார்கள்.

பிரதமர் மோடி பாராட்டு!

இங்குள்ள இந்திய தூதரகமும், தமிழ்ச் சங்கமும் பரஸ்பரம் சிறப்பாக ஒத்துழைக்கின்றன. கடந்த ஆண்டு இந்தோனேசியாவுக்கு பிரதமர் மோடி வந்தபோது, தமிழர்கள் அதிக அளவில் திரண்டு வரவேற்பு அளித்தோம்.

அவர் பேசும்போது, “வெளிநாட்டு வாழ் இந்தியர்களான நீங்கள், இந்தியப் பாரம்பரியத்தைப் பரப்புகிறீர்கள். குறிப்பாக, இங்குள்ள இந்தோனேசிய தமிழ்ச் சங்கம் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரப் பரிவர்த்தனையை சிறப்பாக மேற்கொள்வது பாராட்டுக்குரியது” என்று மனதார வாழ்த்தினார். நாங்கள் நாட்டுப்புறக் கலைஞர்களை தமிழகத்திலிருந்து அழைத்து வந்து, நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். இதைக் கேள்விப்பட்டு, எங்களைப் பாராட்டினார்” என்றார் ரமேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x