Published : 29 Jun 2019 12:32 PM
Last Updated : 29 Jun 2019 12:32 PM

6 மாதங்களாக இயக்குநர் பணியிடம் காலி: மதுரை உலக தமிழ்ச்சங்க செயல்பாடு மந்தம் - தமிழ் ஆய்வு நூல்கள், காப்பியங்கள் இல்லை என புகார்

மதுரை உலக தமிழ்ச்சங்கத்தின் இயக்குநர் பணியிடம் 6 மாதங்களாக காலியாக உள்ளது. பொறுப்பு அதிகாரிகளால் உலக தமிழ்ச்சங்கம் செயல்பாடுகள் மந்தம டைந்துள்ளன.

தமிழ் மொழி வளர்ச்சிக்கும், ஆய்வுக் கும் மதுரை சட்டக்கல்லூரி அருகே 14.15 ஏக்கரில் உலக தமிழ்ச்சங்கக் கட்டிடம் கட்டப்பட்டது. 2016-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, உலக தமிழ் சங்க கட்டிடத்தை திறந்து வைத்தார். ஆனால், தற்போதுவரை உலக தமிழ்ச்சங்கம் முழுமையாகச் செயல்படாமல் காட்சிப் பொருளாகக் காணப்படுகிறது.

மதுரையில் உலக தமிழ்ச் சங்கம் திறக்கப்பட்டதும் சேகர் இயக்குநராக நியமிக் கப்பட்டார். அவர் 31.10.2018 அன்று ஒய்வு பெற்றபிறகு தற்போது வரை இயக்குநர் பணியிடம் காலியாகவே உள்ளது. கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் அன்புச்செழியன், கூடுதல் பொறுப்பாக மதுரை தமிழ்சங்கத்தின் இயக்குநராக செயல்படுகிறார்.

இவர், ஏற்கெனவே கோவை, ஈரோடு, சேலம் மற்றும் மதுரை மாவட்ட தமிழ்வளர்ச் சித்துறை துணை இயக்குநராக இருக்கிறார். தற்போது அந்தப் பொறுப்புகளுடன் உலக தமிழ்ச்சங்க இயக்குநராகவும் பொறுப்பு வகிப்பதால் இவருக்கு கூடுதல் வேலைப்பளு ஏற்பட்டுள்ளது. வாரத்துக்கு இரண்டு நாட்கள் மட்டுமே மதுரை உலக தமிழ்ச் சங்கத்துக்கு வந்து செல்கிறார். அந்த நாட்களில் நிர்வாகப் பணிகளைக் கவனிக்கவே அவருக்கு நேரம் சரியாகி விடுகிறது.

இது குறித்து உலக தமிழ்ச்சங்க ஊழி யர்கள் கூறுகையில், ‘‘உலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகள், நிறுவனங்கள், தமிழ் ஆராய்ச்சி மேற்கொள்ளும் கல்வி நிலையங்கள் பற்றிய புள்ளி விவரங்களைச் சேகரித்து தொகுத்தல், உலகமெங்கும் இயங்கும் தமிழ் அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வருதல் உள்ளிட்ட பணிகளை நோக்கமாகக் கொண்டு இந்த உலக தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டது.

இதுதவிர தமிழறிஞர்கள், இசை, நாடகக் கலைஞர்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு செய்திகளைப் பரப்ப வேண்டும். ஆனால், இயக்குநர் பணியிடம் காலியாக இருப்பதால் இந்தப் பணிகள் நடக்கவில்லை.

தமிழ் கூடல் இலக்கியச் சொற் பொழிவு, நூல் அரங்கேற்றம், ஆய்வரங்கம், தமிழ் ஆசிரியர்கள் புத்தாக்கப் பயிற்சிகள் மட்டுமே நடக்கின்றன. போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் கடந்த இரண்டு வாரமாக தமிழ் கூடல் சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கவில்லை.

நூலகத்தில் பெரிய அளவில் தமிழாய்வு, வரலாற்று நூல்கள், காப்பியங்கள் இடம்பெறவில்லை. உலக தமிழ்ச்சங்கத்துக்கு நிரந்தர இயக்குநர் நியமிக்கப்பட்டால் அவரால் அதிகளவு நிதியும், திட்டங்களையும் அரசிடம் கேட்டு வாங்கலாம். தமிழ்ச் சங்கத்தின் நோக்கத்தையும் நிறைவேற்ற முடியும், ’’ என்றனர்.

இது குறித்து உலக தமிழ்ச்சங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘புதிய இயக்குநர் விரைவில் நியமிக் கப்படுவார். ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறையே நிதி ஒதுக்கீடு வழங்கப்படும். அதில் தாமதம் ஏற்பட்டதால் தமிழ்கூடல் சொற்பொழிவு இரண்டு வாரம் நடக்கவில்லை. விரைவில் அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகிவிடும்’’ என்றார்.தொகுப்பு ஊதியம் தாமதம்

உலக தமிழ்ச்சங்கத்தில், இயக்குநர், கண்காணிப்பாளர், கணக்கு அலுவலர், இளநிலை உதவியாளர்கள், உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், நூலகர் பணிக்கு மட்டுமே நிரந்தரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற பணியாளர்கள் அனைவரும் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சரியாக ஊதியம் வரவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. உலக தமிழ்ச்சங்கம் என்ற ஆர்வத்தில் வேலைக்கு வந்த அவர்கள் தற்போது மன வருத்தத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x