

பிரதமர் மோடி அரசு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் ஜனநாயக கடமை ஆற்றும் என்பதை யாரும் சொல்லித் தரத் தேவையில்லை என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திமுக மக்களவை உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்களிடம் மனு அளிப்பதை விமர்சித்திருந்த தமிழிசை, சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பாஜகவைத் தோற்கடித்த தமிழகம்? இழப்பு?", என பதிவிட்டிருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பதிவு குறித்து தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்களிடம் மனு கொடுப்பதும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது அமைச்சர்களிடம் மனு கொடுப்பதும் ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் வழக்கமான நிகழ்வுகள்தான்.
ஆனால், திண்டுக்கல்லில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தில் என்ன செய்யப் போகிறார்கள் ? பாருங்கள் என்பதை கையால் சொடக்கு போட்டு மிரட்டல் விட்டதைப் பார்த்தோம். நாடாளுமன்றம் நடக்கும்போது பல இருக்கைகள் காலியாக விட்டு விட்டு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராகச் சென்று மத்திய அமைச்சர்களைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது போன்று படம் பிடித்து இங்கே அதை அவர்கள் குடும்பத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவது ஏதோ பெரிய சாதனைகளை நிகழ்த்தி விட்டதாக காட்டிக்கொள்வதும் ஏதோ உலக அதிசயம்போல் சித்தரிக்கப்படுகிறது.
இந்த சூழலில் கடந்த நாடாளுமன்ற திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் நகைக்கடன், கல்விக்கடன், விவசாயக் கடன் ரத்து, நீட் தேர்வை ஒழித்துவிடுவோம், விவசாயிகளுக்கு பல ஆயிரம் மானியம் என பொய்யான வாக்குறுதிகளை சொல்லி நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டியது எங்கள் கடமை.
பெரும்பான்மையான மக்கள் வாக்களித்து மீண்டும் மோடியின் அரசு அரியணை ஏற்றிருக்கும் சூழலில் துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் மட்டும் பாஜக - அதிமுக கூட்டணி வெற்றி பெறாத சூழ்நிலையில் தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் யாருமில்லையே என்பதே உண்மை நிலை.
சென்ற முறை தமிழ்நாட்டின் பிரதிநிதியாக மத்திய அமைச்சராக பங்கு பெற்றிருந்த பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் 40,000 கோடிக்கும் அதிகமான மக்கள் நலத் திட்டங்களையும் தமிழகம் முழுவதும் பல லட்சம் கோடி மதிப்பில் சாலை பணிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நலப்பணிகள் பல நடைபெற்றும் பல ஆண்டுகளாக பேசப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, சென்னையில் மருத்துவப் பூங்கா மையம் இவையெல்லாம் வழங்கியபோதும், இந்த முறை ஒரு பாஜக உறுப்பினரைக் கூட தேர்ந்தெடுக்க மறுத்துவிட்டார்கள் என்ற ஆதங்கம் எங்களுக்கு உண்டு.
அதனால்தான் தமிழகம் இழந்ததை சுட்டிக்காட்ட வேண்டியது எங்கள் ஜனநாயக கடமை. அதே வேலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி போல மோடி அரசுக்குத் தானே வாக்களித்தீர்கள் அவரைக் கேளுங்கள் என்று அநாகரிகமாக பேசாமல், தமிழகம் மத்திய அரசு ஜனநாயக ரீதியாக பங்கு பெறாததால் ஆளும் அரசில் தமிழக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பங்குபெற முடியாமல் இருப்பதுதான் உண்மை நிலை என்பதை எடுத்துரைக்கவே என்னுடைய அந்த ட்விட்டர் பதிவு.
கோரிக்கைகளை கொள்கை முடிவாக அளிக்கும் அதிகாரத்தை மறந்து வெறும் கோரிக்கை மனு கொடுப்பவர்களைத்தான் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளோம். எல்லோருக்கும் எல்லாம் வழங்குவதை ஜனநாயகம் என்று பேசுபவர்கள் கடந்த காலத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சியின் ஆட்சியின்போது தங்கள் குடும்பத்தினருக்கு மட்டுமே குறிப்பிட்ட துறைகளை டெல்லிக்குச் சென்று போராடி, வாதாடி பெற்று ஆதாயம் பெற்று திகார் வரை சென்ற வரலாறு மக்களுக்கு தெரியும்.
எனவே பிரதமர் மோடி அரசு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் ஜனநாயக கடமை ஆற்றும் என்பதை யாரும் சொல்லி தர தேவையில்லை, அதனால்தான் பெரும்பான்மை மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள்", என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.