Published : 15 Aug 2017 07:15 AM
Last Updated : 15 Aug 2017 07:15 AM

கோட்டையில் இன்று சுதந்திர தின விழா கொண்டாட்டம்: தேசிய கொடி ஏற்றுகிறார் முதல்வர் பழனிசாமி - அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகளை வழங்குகிறார்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் கே.பழனிசாமி முதல்முறையாக இன்று தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுகிறார். அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகளையும் வழங்குகிறார்.

இந்தியாவின் 71-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக, பசுமைவழிச் சாலை வீட்டில் இருந்து முதல்வர் கே.பழனிசாமி, காவல்துறையினர் அணிவகுப்புடன் கோட்டைக்கு வருகிறார்.

அணிவகுப்பு மரியாதை

அங்கு முதல்வரை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று முப்படை தளபதிகள், டிஜிபி, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி, மாநகர காவல் ஆணையர் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைக்கிறார். அதைத் தொடர்ந்து காவல் துறையினர், முப்படையினரின் அணிவகுப்பை முதல்வர் பார்வையிடுகிறார்.

அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடி மரத்தில் முதல்வர் கே.பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, சுதந்திர தின உரையாற்றுகிறார். பின்னர் அப்துல் கலாம், கல்பனா சாவ்லா பெயரிலான விருதுகள், முதல்வர் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் வழங்குகிறார். மனவளம் குன்றிய குழந்தைகளுக்கு இனிப்புகளையும் வழங்கி வாழ்த்து தெரிவிப்பார்.

முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக சுதந்திர தின விழாவில் கே.பழனிசாமி பங்கேற்கிறார். அதனால், அவரது சுதந்திர தின உரையில் தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட முக்கியமான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பலத்த பாதுகாப்பு

இந்த விழாவில் பேரவைத் தலைவர் ப.தனபால், அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு உயரதிகாரிகள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின் றனர்.

கொடியேற்றும் விழா முடிந்ததும் காலை 11 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடக்கும் காவல்துறையினருக்கான பதக்கங்கள், விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் கே.பழனிசாமி பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. இதிலும் முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x