Published : 29 Aug 2017 02:57 PM
Last Updated : 29 Aug 2017 02:57 PM

பிரமாண பத்திரத்தை திரும்ப பெற்றால் வழக்கு: டிடிவி ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் உறுதி

தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை வாபஸ் வாங்க முடியாது; சட்டப்படி அது செல்லாது எனவும் அவ்வாறு திரும்பப் பெற்றால், நீதிமன்றத்தை நாடத் தயாராக உள்ளதாகவும் டிடிவி ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தொடர்ந்து 8-வது நாளாக தங்கியுள்ள தங்க தமிழ்செல்வன் உட்பட டிடிவி ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்செல்வன், சசிகலா மற்றும் தினகரனை நீக்குவதற்கான அதிகாரம் அவர்களுக்கு இல்லை.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் யாருக்கும் முறையான அழைப்பு விடுக்கவில்லை. கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களே அதிக அளவில் இருந்தனர், அவர்கள் யாரும் ஆட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை.

எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணிக்கு வேண்டியவர்களை மட்டும் அழைத்து எடுக்கப்பட்ட முடிவு அதிமுக கட்சி விதிமுறைகளின்படி செல்லுபடி ஆகாது. எனவே எங்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

இன்னும் இரண்டு தினங்களில் எங்களிடம் எத்தனை எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பதைக் காட்டுவோம்'' என உறுதியாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சரை மாற்றக் கோரி இன்று அல்லது நாளை அனைத்து ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் டெல்லி சென்று ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

பிரமாணப் பத்திரத்தை வாபஸ் பெற ஓபிஎஸ், ஈபிஎஸ் டெல்லி சென்றுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''பிரமாண பத்திரத்தை வாபஸ் வாங்க முடியாது; சட்டப்படி அது செல்லாது. அவ்வாறு திரும்பப் பெற்றால், நாங்கள் நீதிமன்றத்தை நாடத் தயாராக உள்ளோம்'' என்றும் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x