Published : 22 Aug 2017 09:22 AM
Last Updated : 22 Aug 2017 09:22 AM

அரக்கோணம் ரயில் விபத்தில் 12 பேர் பலியான வழக்கு: ரயில் ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறை - வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு

அரக்கோணம் அருகே கடந்த 2011-ம் ஆண்டு நிகழ்ந்த ரயில் விபத்தில் 12 பேர் பலியான வழக்கில், ரயில் ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2011 செப்.13-ம் தேதி மாலை சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் நோக்கி விரைவு பயணிகள் ரயில் புறப்பட்டது. ராஜ்குமார் (40) என்பவர் ரயிலை இயக்கினார். இரவு 9.10 மணியளவில் அரக்கோணத்தைக் கடந்து சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த அரக்கோணம்-காட்பாடி பயணிகள் ரயில் மீது ராஜ்குமார் இயக்கிய ரயில் மோதியது.

இந்த விபத்தில் 12 பயணிகள் உயிரிழந்தனர். 76 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக அரக்கோணம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரயில்வே துணை காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

விதிகளை மீறிய ஓட்டுநர்

விசாரணையில், விபத்துக்கு ஓட்டுநர் ராஜ்குமார்தான் காரணம் என தெரியவந்தது. ‘மணிக்கு 75 கி.மீ வேகத்தில் இயக்க வேண்டிய ரயிலை அவர் 97 கி.மீ வேகத்தில் இயக்கியதும், அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து அடுத்தடுத்துள்ள 2 சிவப்பு சிக்னல்களை கவனிக்காமல் ரயிலை இயக்கியதும்’ தெரியவந்தது.

மேலும், விபத்து ஏற்படும் நேரத்தில் அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தது உறுதியானது.

இது தொடர்பான வழக்கு, வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தி, ‘விபத்தை ஏற்படுத்திய ரயிலின் ஓட்டுநர் ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரயில்வே சொத்தை சேதப்படுத்தியது தொடர் பாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம்’ விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.

இதையடுத்து, ராஜ்குமார் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் டெல்லிபாபு ஆஜரானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x