Published : 09 Aug 2017 07:57 AM
Last Updated : 09 Aug 2017 07:57 AM

தண்ணீரே இல்லாத நிலையில் தமிழகத்தில் தாமரை எப்படி மலரும்? - நாஞ்சில் சம்பத் கேள்வி

தமிழகத்தில் தண்ணீரே இல்லாத நிலையில் தாமரை எப்படி மலரும் என்று அதிமுக அம்மா அணியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

அதிமுகவின் எதிர்காலமே டிடிவி தினகரன்தான். அவர் தலைமை பதவிக்கு வந்தால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். எல்லோரும் எளிதில் அணுகக் கூடியவராக தினகரன் உள்ளார். தன்னிடம் வரும் எல்லா மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

வைகோ, ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோருடன் நான் பணியாற்றியுள்ளேன். ஆனால், டிடிவி தினகரனைப் போல ஜனநாயகத் தன்மை கொண்டவர்களை கண்டதில்லை. அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை பொதுச் செயலாளராக்க வேண்டும் என்ற கனவு உள்ளது. தமிழ்நாட்டில் 12-க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் ஆகத் துடிக்கிறார்கள். ஆனால் முதல்வராகும் ஆளுமை டிடிவி தினகரனுக்குத்தான் உள்ளது.

தன்னை வளர்த்து ஆளாக்கிய குடும்பத்துக்கு துரோகம் செய்ய நினைக்கும் ஒருவராகத்தான் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். தன்னைச் சேர்ந்தவர்களுக்கு தண்ணீர் கூட தர மனம் இல்லாதவராக அவர் உள்ளார். சமீபத்தில் பதவி அறிவிக்கப்பட்டவர்கள் அதை ஏற்க மறுப்பதற்கு அமைச்சர் உதயகுமார்தான் காரணம். பதவி அறிவிக்கப்பட்ட பாதி பேர் கட்சிக்குத் திரும்பி வந்து விட்டனர். மீதமுள்ளவர்களும் விரைவில் வந்து விடுவர். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்குமா என சிலர் கேட்கின்றனர். தமிழகத்தில் தண்ணீரே இல்லாத நிலையில் தாமரை எப்படி மலரும்? இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x