Published : 09 Aug 2017 11:49 AM
Last Updated : 09 Aug 2017 11:49 AM

பால் உற்பத்தி, இனப் பெருக்கம் அறிய பசுக்களுக்கு மருத்துவ அடையாள அட்டை அறிமுகம்

உற்பத்தித் திறன் உள்ள பசு மாடுகளை அடையாளம் காணும் வகையில் அவைகளுக்கான மருத்துவ அடையாள அட்டை வழங்கும் திட்டம் முதல்முறையாக கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.

பசு மாடுகளின் பால் உற்பத்தி, இனப்பெருக்கம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் வகையில் நாடு முழுவதும் உள்ள பசு மாடுகளுக்கு மருத்துவ அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் முதல் முறையாக தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் தொடங்கப் பட்டுள்ளது. பசு மாடுகளின் விவரங் களைச் சேகரித்து இந்த அடையாள அட்டையில் பதிவு செய்வதற்கான பணிகளும் அந்தந்த பகுதி கால்நடை மருந்தகங்களில் தொடங்கியுள்ளன.

கால்நடை பராமரிப்புத் துறை கோவை மண்டல இணை இயக்குநர் ராமச்சந்திரன் கூறும்போது, ‘தேசிய பால் உற்பத்திக் கழகம் மூலம், நாடு முழுவதும் உள்ள உற்பத்தித் திறன் உள்ள (பால், இனப் பெருக்கம்) பசுக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஒட்டுமொத்த தகவல்களையும் சேகரிக்க கால்நடைகளுக்கான உற்பத்தி மற்றும் மருத்துவ தகவல்களுக்கான தளமான ஐஎன்ஏபிஎச் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

கால்நடை உரிமையாளர்களிடம் உள்ள பசுமாடுகளின் தகவல்கள் முழுமையாக பெற்றுக் கொள்ளப்படும். அந்த தகவல்கள் மருத்துவ அட்டையில் பதிவு செய்து உரிமையாளர்களுக்கு கொடுக்கப்படும். அதற்கு அடையாளமாக மாடுகளுக்கு காதுகளில் அடையாள பொத்தான் பொருத்தப்படும். அந்த தகவல்கள் இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப் படும். இதன் மூலம் உற்பத்தித் திறன் உள்ள பசு இனங்களை எளிதில் அடையாளம் காணவும், அவற்றின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும் முடியும்’ என்றார்.

வண்ண அட்டைகள்

அதிகாரிகள் கூறும்போது, ‘மாடுகளுக்கு 12 இலக்க அடையாள எண் கொடுக்கப்படும். கோவையில் 105 மையங்களில் இதற்கான பணிகள் தொடங்கி யுள்ளன.

கலப்பினமாடு, நாட்டினமாடு, எருமை ஆகியவற்றுக்கு 3 வண்ணங்களில் 3 வகையான அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. விரைவில் மற்ற பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும். கால்நடைகளைக் கண்காணிக்கவும், மருத்துவ உதவி மற்றும் ஆலோசனை களைப் பெறவும், மருத்துவக் காப்பீட்டுக்கும் இந்த அடையாள அட்டைகள் உதவும்’ என்றனர்.

வரவேற்பும் - எதிர்ப்பும்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிச்சாமி கூறும்போது, ‘மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதால் விவசாயிகள் மாடுகளை வாங்குதல் மற்றும் விற்பனை செய்யும்போது நெருக்கடி ஏற்படும். வறட்சியால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் விவசாயிகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் எந்த முயற்சியையும் எடுக்காமல், கால்நடைகளைப் பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுவது அதிர்ச்சியளிக்கிறது.

கால்நடைகளை வளர்க்க முடியாமல் விற்க நினைக்கும் விவசாயிகளும் இந்த திட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மாடுகளை இறைச்சிக்காக விற்பதை தடுக்கும் நோக்கத்திலேயே இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில் இந்த திட்டம் தேவையற்றது’ என்றார்.

அதேசமயம், மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள், அதற்காக வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிக்கவும், மருத்துவவசதிகளைப் பெறவும் இந்த அடையாள அட்டைகள் பயன்படும். எனவே வரவேற்கத்தக்கது என ஒரு சில விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x