Last Updated : 30 Aug, 2017 09:06 AM

 

Published : 30 Aug 2017 09:06 AM
Last Updated : 30 Aug 2017 09:06 AM

அனைத்தும் டிஜிட்டல் மயமாகும் காலத்தில் அசல் ஓட்டுநர் உரிமத்துடன் அலையச் சொல்வதா? - வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி

‘செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்து அனைத்து வாகன ஓட்டிகளும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்’ என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 23-ம் தேதி தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக அரசின் ஆணையின்படி வரும் 1-ம் தேதி முதல் அசல் வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகன ஓட்டிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

எவ்வளவோ தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், அதை பயன்படுத்தாமல், அசல் ஆவணங்களைக் கையில் எடுத்துச்செல்ல வேண்டும் என்ற உத்தரவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பல வளர்ந்த நாடுகளில் வாகன சோதனையின்போது ஓட்டுநர் உரிமம் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் ஓட்டுநர் உரிமத்தின் எண்ணைத் தெரிவிக்க வேண்டும். அந்த எண்ணை ஸ்வைப் மிஷின் போன்ற கையடக்க கருவியில் போலீஸார் பதிவு செய்ததும், சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் முழு விவரமும் புகைப்படத்துடன் திரையில் தெரியும்.

இணையதள வசதியுடன் இருக்கும் இந்த கையடக்க கருவியின் விலை ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவுதான். ஓட்டுநர் உரிமத்தின் எண்ணை நினைவில் வைத்துக்கொள்ள முடியாதவர்கள் அதன் நகலை வைத்துக் கொண்டால் போதும்.

‘டிஜிட்டல் இந்தியா’ என்று கூறிக்கொண்டு, தேவையான இடத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல், வாகன ஓட்டிகளைச் சிரமப்படுத்துவதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சுகுமார் கூறும்போது, ‘‘அசல் ஆவணங்கள் எடுத்துச் செல்லும்போது, சோதனை என்ற பெயரில் காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரி கள் அதைப் பறித்துக்கொண்டு, மீண்டும் திருப்பிக் கொடுக்க அதிகளவில் லஞ்சம் வசூலிப்பார்கள். இதற்கு அரசு வழி செய்து கொடுக்கிறது’’ என்று தெரிவித் தார்.

வாகன ஓட்டிகள் கருத்து

கார்த்திக்: தொலைந்த ஓட்டுநர் உரிமத்துக்கு பதிலாக புதிய ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, ஒரு மாதம் காத்திருந்து ‘நான் டிரேசபுள் சர்டிபிகேட்’ வாங்கி, ஆர்டிஓ அலுவலகத்தில் காத்திருந்து, லஞ்சம் கொடுத்தால் மட்டுமே புதிய ஓட்டுநர் உரிமம் பெற முடியும்.

லட்சுமண பெருமாள்:போக்குவரத்து போலீஸார் அபராத கட்டணம் வசூலிப்பதற்கு ஸ்வைப் மிஷின் வைத்திருக்கும்போது, ஒருவரின் ஓட்டுநர் உரிமம் குறித்த தகவல்களைக் கொடுக்கும் கையடக்க கருவியையும் வைத்திருக்க முடியாதா என்ன?

ஸ்ரீகாந்த்:அசல் ஓட்டுநர் உரிமத்தை எப்போதும் கையில் வைத்திருக்கும்போது அது தொலைந்து போவதற்கும், எளிதில் சேதம் அடைவதற்கும், திருடப்படுவதற்கும், மழைக்காலங்களில் சேதம் அடைவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

இவ்வாறு கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x