Published : 20 Aug 2017 09:43 AM
Last Updated : 20 Aug 2017 09:43 AM

அதிமுக இரு அணிகள் இணைப்பு உறுதியான நிலையில் ஆதரவாளர்களுடன் தினகரன் தீவிர ஆலோசனை

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகளுடன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார்.

அதிமுகவில் முதல்வர் கே.பழனிசாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஓரிரு நாட்களில் இணைப்பு நடைபெறும் என்று முதல்வர் கே.பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இதில், எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், வெற்றிவேல், சுந்தர்ராஜன் மற்றும் டிடிவி.தினகரனால் கட்சி நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்ட சிலரும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு எம்எல்ஏ பழனியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து அடுத்தகட்டமாக இந்த இயக்கத்தை எப்படி வழிநடத்திச் செல்வது என்பது பற்றி ஆலோசனை நடத்த வந்தோம்.

அடுத்ததாக 8 இடங்களில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களை எவ்வாறு சிறப்பாக நடத்துவது என்பது பற்றி பேசினோம். சசிகலாவின் வழிகாட்டுதலின்பேரில் இந்த இயக்கத்தைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.

அதிமுகவில் இரு அணிகள் கிடையாது. அதிமுக சசிகலா தலைமையில்தான் இருக்கிறது. சிறு சிறு அணிகளாக இருப்பவர்கள் இணைய வேண்டும் என்றால் இவ்வளவு காலம் தாழ்த்தி இணைய வேண்டியதில்லை. சுயநல நோக்கத்தோடு தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும், தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அணிகளின் இணைப்பு பேச்சு நடக்கிறது.

ஆட்சி என்பது ஒரு பேருந்து போன்றது. அதனை சிறப்பாக இயக்குவதற்காக ஓட்டுநர் என்ற முதல்வரை நியமிக்கிறோம். அவர் சிறப்பாக செயல்பட்டு நம்மை பத்திரமாக கொண்டு செல்வார் என்று எதிர்பார்ப்போம். ஓ.பன்னீர்செல்வம் சரியாக செயல்படாததால் அவரை மாற்றிவிட்டு பழனிசாமியை நியமித்தோம். அவரும் சரியாக செயல்படாவிட்டால் அவரை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுப்போம். இவ்வாறு பழனியப்பன் கூறினார்.

ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ சுந்தர்ராஜன் கூறும்போது, “ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எங்கள் மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. எனவே, விசாரணை கமிஷனை வரவேற்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x