

தமிழகத்தில் ஒரு காலத்தில் 27 சதவீதம் வாக்கு வங்கி வைத்தி ருந்த காங்கிரஸ் கட்சி, 5 சதவீத வாக்கு வங்கியாக மாறி யதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலிழந்ததுதான் காரணம். எனவேதான் தமிழகத்தில் காங்கிரஸுக்கு தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டிய நிலை வாசனுக்கு ஏற்பட்டது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், தற்போது வாசனின் தனிக் கட்சியில் கைகோர்த்துள்ளவருமான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் தெரிவித் துள்ளார்.
கோவை, ஆடீஸ் வீதியில் உள்ள, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைமை நிலையங்களில் ஒன்றான மூப்பனார் பவனில், வாசன் ஆதரவாளர்களின் ஆலோ சனைக் கூட்டம் நேற்று நடை பெற்றது. இதில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், காங்கிரஸ் மகளிர் அணி முன்னாள் தலை வரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேஸ்வரி உள்பட ஏராளமான கோவை காங்கிரஸ் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக எஸ்.ஆர்.பாலசுப்பி ரமணியம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி செயலிழந்து கிடக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்த ஒரு அரசியல் முடிவையும் எடுக்க முடியாத கட்சியாகவே இருந்து வந்தது. கூட்டணி முடிவு சரியான வகையில் எடுக்காததால்தான் மகாராஷ்ட்ரா, அரியானாவில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஒரு காலத்தில் அதிமுகவுக்கு இணையாக 27 சதவீதம் வாக்கு வங்கி பெற்ற கட்சியாக விளங்கியது. தற்போது அதன் செயலற்ற தன்மையால் வாக்கு வங்கியின் அளவு 5 சதவீதமாக குறைந்துவிட்டது. எனவேதான் மக்கள் மனதில் பதிகிற மாதிரி, தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து, அதற்கேற்ற அளவில் புதிய கட்சியை தொடங்குகிறார் தலைவர் வாசன் என்றார்.
கோவையில் 20 சதவீதம் பேருக்கு குறைவாகவே காங்கிரஸி லிருந்து மாற்று அணிக்கு தொண்டர்கள் சென்றுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்டத் தலைவர் மனோகரன் சொல்லியுள்ளாரே? என்ற கேள்விக்கு, ‘அதற்கு பதில் சொல்ல விருப்பமில்லை. அவர்களிடம் உள்ளவர்களை விட எங்களிடம் வந்துள்ள தொண்டர்களே அதிகம்’ என்று முடித்துக் கொண்டார்.
கடந்த வாரம் வரை ஆளில்லாமல் காட்சியளித்து வந்த மூப்பனார் பவன், நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது தொண்டர்களாலும், பழைய தமாகா நிர்வாகிகளாலும் நிரம்பி வழிந்தது. எனவே ஆலோசனைக் கூட்டத்துக்கு பக்கத்திலேயே சாமியானா டெண்ட் அடித்து நிர்வாகிகள் கூட்டம் நடத்தினர்.