Last Updated : 02 Aug, 2017 10:08 AM

 

Published : 02 Aug 2017 10:08 AM
Last Updated : 02 Aug 2017 10:08 AM

ராணுவ கிராமத்தில் ஒரு புத்தகப் பிரியர்!

‘வே

லையில் சேர்ந்த பிறகு பள்ளி ஆசிரியர்கள் வாசிப்பை மறந்துவிடுகிறார்கள்’ என்று பரவலான ஒரு ஆதங்கம் உண்டு. ஆனால், வேலையைவிட்டு வந்த பிறகும் தினமும் புதிது புதிதாய் படித்துக் கொண்டே இருக்கிறார் 76 வயதான ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ச.ஆதிமூலம்.

“தி இந்து வெளியிடும் எல்லாப் புத்தகத்தையும் சார் உடனுக்கொடனே கேட்டு வாங்கிடுவாரு. உங்க ‘தமிழ் திசை’ வெளியிட்ட ராமானுஜர் புத்தகத்தை படிச்சே முடிச்சிட்டார்னா பாத்துக்கோங்களே..” என்று ஆதிமூலத்தை நமக்கு அறிமுகப்படுத்தினார் பத்திரிகை முகவர் ஒருவர்.

ராணுவ கிராமம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள பெருமாள்தேவன்பட்டிதான் ஆதிமூலத்தின் சொந்த ஊர். வீட்டுக்கு ஒருவர் எனச் சொல்லுமளவுக்கு ராணுவத்தில் பணிபுரியும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள கிராமம். நேதாஜியின் ஐ.என்.ஏ-யில் ஆரம்பித்து, சீனப்போர், பங்களாதேஷ் போர் என அனைத்திலும் இவ்வூராரின் ராணுவப் பங்களிப்பு தொடர்கிறது.

அன்பு அழைப்பின் பேரில் ஆசிரியர் ஆதிமூலத்தின் வீட்டுக்குச் சென்றோம். மாடியில் சின்னதாய் ஒரு அறை. அதிலுள்ள அலமாரிகள், பரண்கள் அனைத்தும் புத்தகங்களால் ததும்பி வழிகின்றன. தரையிலும் அவரது இருக்கையைச் சுற்றிலும் பெட்டி பெட்டியாய் புத்தகங்கள். பழைய புத்தகங்களை நகைகளைப் போல டப்பாக்களில் வைத்துப் பாதுகாக்கிறார் ஆதிமூலம். போதாதுக்கு, சமீபத்தில் அவர் வாசித்துவிட்டு மேஜையில் போட்டு வைத்திருக்கும் புத்தகங்களின் குவியல் நம்மை மிரளவைக்கின்றன.

கேக்குறவங்களுக்குக் கொடுத்திடுவேன்

“சின்ன வயசுல, துண்டு காகிதம் கெடைச்சாலும், முழுக்க வாசிச்சிருவேன் தம்பி. அப்பா ஆடு மேய்ச்சாலும் என்னைய நல்லா படிக்க வெச்சாரு. 1962-ல் தமிழாசிரியர் வேலை தேடி வந்துச்சி. தேவகோட்டை முத்தாத்தாள் நடுநிலைப்பள்ளியில் வேலைக்குச் சேர்ந்து, 2000-ல் டி.பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக ஓய்வுபெற்றேன். எப்பவுமே, நான் படிச்ச புத்தகங்களை ஆர்வமா கேக்குற பசங்களுக்குக் கொடுத்திடுவேன், அந்தப் பழக்கம் இன்னமும் தொடருது” என்கிறார் ஆதிமூலம்.

உள்ளூர் நூலகத்தின் முதன்மை புரவலரான இவர், வேப்பங்குளம் அரசு உதவிபெறும் பள்ளி, கலங்காப்பேரி மெட்ரிக் பள்ளி நூலகங்களுக்கு ஏராளமான புத்தகங்களை வழங்கியிருக்கிறார். இவர் கவிஞரும்கூட. வேலூர் நாராயணன் நடத்திய அன்றைய ‘அலை ஓசை’ நாளிதழ் உள்பட பல இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தமிழக அரசின் ‘தமிழரசு’ இதழில் ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதும் போட்டி நடத்தினார். அதிலும் இவரது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. பெருமாள் தேவன்பட்டி கிராம கமிட்டி செயலாளராகவும் இருக்கும் ஆதிமூலம், பொதுப்பணிகளையும் ஆர்வத்துடன் செய்கிறார். இப்போதுகூட உள்ளூரில் உள்ள சார்பு அஞ்சலகத்துக்கு சொந்தக் கட்டிடம் கட்டும் முயற்சியில் இருக்கிறார் மனிதர்.

கல்கி, அகிலன், சாண்டில்யன் எழுதிய புத்தகங்களை மட்டும் இவர் யாருக்கும் தருவதில்லை. கேட்டால், “அது என் உசுரு” என்கிறார். யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதைத் தெரிந்து அவர்களுக்கான புத்தகங்களைத் தரும் ஆதிமூலம், குழந்தைகள் மீது பாசம் காட்டுவது போல புத்தகங்களை நேசிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x