Published : 01 Aug 2017 07:58 AM
Last Updated : 01 Aug 2017 07:58 AM

பெற்றோர் விடுதலைக்குப் பிறகே திருமணம்: மகளின் மனநிலையை மாற்ற போராடும் நளினி - 6 மாதங்கள் பரோல் கோரியதின் பின்னணி தகவல்

மகள் ஹரித்ராவை சமாதானம் செய்து திருமண ஏற்பாடுகள் செய்யவே, நளினி 6 மாதங்கள் பரோல் கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 26 ஆண்டுகளாக சிறை வாழ்க்கையை அனுபவித்துவரும் நளினியின் தற்போதைய பெரிய கனவாக இருப்பது அவரது மகள் ஹரித்ராவின் திருமணம்தான். லண்டனில் உறவினர்களுடன் வசித்துவரும் அவருக்கு திருமண ஏற்பாடு நடந்துவருகிறது.

உயர் நீதிமன்றத்தில் மனு

இந்நிலையில், மகளின் திருமணத்துக்காக 6 மாதங்கள் பரோல் வழங்கக்கோரி நளினி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகள் குறித்து நளினி மற்றும் முருகன் தரப்பில் விசாரித்தபோது, ‘‘ஒரு தாயாக கடமையை நிறைவேற்ற நளினி விரும்புகிறார். இந்தியாவிலேயே அதிக நாள் சிறை தண்டனை அனுபவித்தவர் நளினி. திருமண வாழ்க்கை தொடங்கிய சில மாதங்களிலேயே அவர் சிறைக்கு சென்றார். சிறையில் பிறந்த ஹரித்ரா சில ஆண்டுகள் அவருடன் வளர்ந்தார். பின்னர், லண்டனில் உள்ள உறவினர்கள் வீட்டில் ஹரித்ரா வளர்ந்தார். தற்போது அவர் மருத்துவத் துறையில் பணியாற்றி வருகிறார்.

பெற்றோரின் விடுதலைக்குப் பிறகே திருமணம் செய்துகொள்வதாக ஹரித்ரா கூறிவருகிறார். நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, மகளின் திருமண ஏற்பாடுகளை தள்ளிவைக்க நளினி, முருகன் உள்ளிட்டோர் விரும்பவில்லை. அவரை சமாதானம் செய்து திருமணத்தை நடத்திவைக்க விரும்புகின்றனர்.

லண்டனில் நிகழ்ச்சி

பெரியோர் விருப்பத்தின்படியே திருமண ஏற்பாடு நடந்துவருகிறது. தற்போதைய நிலையில் மாப்பிள்ளை தொடர்பான விவரங்களை வெளியில் சொல்ல முடியாது. ஹரித்ராவுக்கு ஏற்றபடி மாப்பிள்ளை பார்க்கப்படுகிறது. மாப்பிள்ளை யார் என்பது இறுதியானதும் திருமணத்தை லண்டன் அல்லது இலங்கையில் நடத்த அதிக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் மணமக்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும்.

திருமணம் தொடர்பான வேலைகளை நளினி முன்னின்று செய்ய வேண்டியுள்ளது. நளினிக்கு பரோல் கிடைத்ததும் ஹரித்ராவின் திருமண வேலைகள் விரைவுபடுத்தப்படும். மகளை சமாதானம் செய்து திருமணம் நடத்துவதற்கான வேலைகளுக்காகவே நளினி 6 மாதங்கள் பரோல் கோரியுள்ளார். தனது விடுதலைக்குப் பிறகு மகளுடன் தங்கியிருக்கவே நளினி விரும்புகிறார்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x