

ராயப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயப்பேட்டையில் உள்ள கேம்பிரிட்ஜ் என்ற தனியார் பள்ளிக்கு நேற்று ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தின் அனுப்புநர் முகவரியில், ‘ஜேம்ஸ், தலைமை ஆசிரியர், மாதவரம் ஜெய்கோபால் கரோடியா பள்ளி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில், “உங்கள் பள்ளியில் படிக்கும் பூபதி என்ற மாணவன் அரசு சலுகை கிடைக்காமல் அவதிப் பட்டுக்கொண்டு இருக்கிறான்.
அவனது சான்றிதழ் வேப்பேரி சர்ச் பார்க் பள்ளியில் உள்ளது. இதை வாங்கி அரசு உதவி கொடுக்க ஆவன செய்யும்படி பலமுறை நான் உங்களிடம் கூறினேன். ஆனால் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 12, 13, 14 ஆகிய தேதிகளில் உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து அப்பள்ளியின் முதல்வர் ராயப்பேட்டை போலீஸில் புகார் செய்தார். போலீஸ் விசாரணை யில் பூபதி என்ற மாணவன் கேம்பிரிட்ஜ் பள்ளியில் படிப்பதும் அவனுக்கும் இந்த மிரட்டலுக்கும் தொடர்பில்லை என்றும் தெரியவந்தது. மேலும் அனுப்புநர் முகவரியில் உள்ள பெயரில் பள்ளிக்கூடமே இல்லை என்பதும் தெரிய வந்தது. இதுபற்றி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிபிஐ அலுவலகத்துக்கு மிரட்டல்
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் பரவியது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனையில் ஈடுபட்டனர். சிபிஐ அதிகாரிகளும் வந்து ஆய்வு நடத்தினர். பின்னர், வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்று கண்டறியப்பட்டது. இதேபோல் அடையாறு சாஸ்திரி நகர் ராஜாஜி பவனில் உள்ள மத்திய அரசு அலுவலகத்திலும் வெடிகுண்டு புரளி கிளம்பியது.