ஊராட்சித் தலைவரின் முன்முயற்சியால் புளியஞ்சோலையாக மாறிய குளக்கரைகள் சூழலுக்கு பாதுகாப்பு, அரசுக்கு வருமானம்

ஊராட்சித் தலைவரின் முன்முயற்சியால் புளியஞ்சோலையாக மாறிய குளக்கரைகள் சூழலுக்கு பாதுகாப்பு, அரசுக்கு வருமானம்
Updated on
2 min read

நீர்ப்பிடிப்பு பகுதிகள் எங்கும் ஆக்கிரமிப்பு, இயற்கை வளங்கள் அழிக்கப்படும் சூழலில் ஒரு கிராமத்தில் உள்ள குளங்களின் கரைகளில் சுமார் 1,330 புளிய மரக்கன்றுகளை நட்டு அப்பகுதியையே புளியஞ்சோலையாக மாற்றியமைத்திருப்பது நிச்சயம் ஒரு சாதனைதான்.

இதன்மூலம் சூழல் பாதுகாக்கப்படுவதோடு, புவிக்கு குடையாக இருக்கும் மரங்களால் ஆண்டுக்கு அரசுக்கு லட்சக்கணக்கில் வருமானமும் கிடைக்கிறது. இந்த சாதனையை நிகழ்த்தி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும், புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே மாஞ்சான்விடுதி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ந.பாலசுப்பிரமணியன் (75) கூறியதாவது:

“மாஞ்சான்விடுதி கிராமத்துல நான் கடந்த நான்கு முறை ஊராட்சிமன்றத் தலைவராக இருந்தேன். அப்போ, மக்கள் சொல்லும் அடிப்படைப் பிரச்சினைகளை உடனே தீர்க்கணும்னாகூட நிதி இருக்காது. அப்படின்னா நிதி ஆதாரத்தை நாமே ஏற்படுத்திக்கொண்டால்தான் அரசை எதிர்பார்க்காமல் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தீர்த்துக்கொள்ள முடியும் என்பது ஒன்று. அப்புறம், இந்தப் பகுதியில குளத்துல தேங்கும் தண்ணீரை நேரடியாகவும், பம்புசெட் வைத்தும் தான் விவசாயம் செய்வதால குளங்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுச்சு.

இதனாலதான் கடந்த 1986-ல ஒவ்வொரு குளத்தின் கரைகளிலும் வறட்சியையும் தாங்கி, அதோடு நல்ல வருமானத்தைக் கொடுக்கக்கூடிய புளியமரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்கினேன். இதற்காக ஒவ்வொரு ஊராக சென்று கன்றுகளை இலவசமாக வாங்கி எனது செலவிலேயே வாடகைக்கு லாரி பிடித்து ஏற்றி வந்து ஊராட்சி நிதியில் செலவிட்டு நட்டோம்.

இதற்காக 3 நபர்களை நியமித்து லாரி மூலம் தண்ணீர் ஊற்றினோம். ஆடு, மாடுகள் குளத்துக்கரைகளில் உள்ள கன்றுகளை சேதப்படுத்தக்கூடாது என்பதற்காக ஊரைக் கூட்டி கூட்டம் போட்டு கட்டுப்பாடு விதித்தோம். அதன்படி மக்களும் நடந்துகொண்டார்கள். என்னுடன் சேர்த்து 4 பேர் காவலாளியாக இருந்தோம். அனைவரின் ஒத்துழைப்பால் நடப்பட்ட கன்றுகளில் மாஞ்சான் விடுதியில் பாதினிக் கண்மாய் கரையில் 170 புளிய மரங்களும், மாஞ்சக் கண்மாயில் 195, முருங்கக் கண்மாயில் 275, பெரியகோட்டையான் ஊருணியில் 75, வம்பன் ஊருணியில் 15, கல்லுப்பள்ளம் பகுதியில் 600 என மொத்தம் 1330 மரங்களாக வளர்ந்துள்ளன.

இவைகள் கடந்த 1991-லிருந்து காய்க்கத் தொடங்கிவிட்டன. அதற்கு முன்னதாக 1970-ல் நடப்பட்ட 400 தென்னை மரங்களில் வறட்சியிலிருந்து மீண்ட 135 மரங்களும், சுமார் 50 பலா மரங்களும் நல்ல விளைச்சலைக் கொடுத்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சத்துக்கு புளி விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு போதிய மழை இல்லாமல் விளைச்சல் குறைந்ததால் விற்பனையும் குறைந்துவிட்டது. மரங்களால் குளங்களின் கரைகள் பலமாக உள்ளன. ஊராட்சிக்கும் வருமானம் கிடைக்கிறது. அந்தப் பகுதியில் விவசாயம் செய்வோருக்கும் பயனுள்ளதாக உள்ளது.

அதோடு வீட்டு சமையலுக்கும் மக்கள் புளியைப் பயன்படுத்துகின்றனர். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. தற்போதெல்லாம் மரங்களை வளர்க்க அரசே ஊக்குவிப்பதால் அனைத்து உள்ளாட்சித் தலைவர்களும் ஆர்வம் காட்டினால் நாம் எவ்வளவு மிக மோசமான நிலையில் உள்ள கிராமங்களைகூட வளர்ச்சி அடையச் செய்துவிடலாம். அது நூற்றாண்டு கடந்தும் பெயர் சொல்லும் என்று ந.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுகுறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் அப்பாவு பாலாண்டார் கூறியதாவது: இயற்கையை பாதுகாத்திட குளம், கண்மாய்க்கரைகள், தரிசு நிலங்களில் மரங்களை நடவேண்டும், கருவேல மற்றும் தைலரமங்களை அகற்ற வேண்டுமென எங்களைப்போன்ற இயற்கை ஆர்வலர்கள் அதிகாரிகளிடமும், மக்களிடமும் சொல்லிக்கொண்டேதான் வருகிறோம். ஆனால், அதை நிறைவேற்றும் தகுதி ஒவ்வொரு ஊராட்சித் தலைவரிடமும் இருக்கிறது.

ஆனால், செயல்படுத்துவதில்தான் தேக்கம். இதற்காக தன் பாக்கெட்டில் இருந்து ஒரு காசுகூட செலவிடத் தேவையில்லை. அரசே கன்றுகளை இலவசமாகக் கொடுக்கிறது. அதற்கான செலவு தொகையையும் கொடுக்கிறது. ஆனால் இவர்கள் முயற்சி எடுக்காததுதான் மாபெரும் குறை. மாஞ்சான் விடுதியில் முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு மரக்கன்றுகளை நடும்போது அவரை அந்த ஊரில் பலர் ஏளனமாகக்கூட பேசியிருக்கலாம். ஆனால், தற்போது அவரை ஊரே பாராட்டுகிறதே. அவரது பணி இந்த மாவட்டத்துக்கே முன்மாதிரியாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in