Last Updated : 11 Aug, 2017 08:42 AM

 

Published : 11 Aug 2017 08:42 AM
Last Updated : 11 Aug 2017 08:42 AM

அமித் ஷா வருகையும், அதிமுகவில் குழப்பமும்

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வரும் 22-ம் தேதி சென்னைக்கு வரவிருக்கும் நிலையில், அதிமுக உள்கட்சி குழப்பம் உச்சகட்டத்தை எட்டியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியதைத் தொடர்ந்து அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துக்குப் பிறகு அதிமுக இரு அணிகளையும் இணைப் பதற்கான முயற்சிகள் தொடங்கின. இரு அணிகள் சார்பிலும் பேச்சு நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டன. சசிகலா குடும்பத்தினர் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதில் ஓபிஎஸ் அணி உறுதியாக இருந்ததால் இணைப்பு முயற்சிகள் கைகூட வில்லை.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் அதிமுக அரசு இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் முதல்வர் கே.பழனி சாமியும், ஓபிஎஸ்ஸும் பிரதமர் நரேந்திர மோடியை அடிக்கடி சந்தித்துப் பேசி வருகின்றனர். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் மூன்று முறை மோடியை இவர்கள் சந்தித்துள்ளனர்.

இந்தச் சூழலில் அதிமுக இரு அணிகளையும் இணைக்க பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் காலக்கெடு நிர்ணயித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது கட்சி விதிகளுக்கு விரோதமானது. எனவே, அவரால் நியமிக்கப்பட்ட பொறுப்புகள் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் அதிமுக இரு அணிகளும் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள டிடிவி தினகரன், கட்சி தனது கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பரபரப்பான சூழலில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வரும் 22, 23, 24 தேதிகளில் தமிழகம் வருகிறார். பாஜக தலைவராக 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அவர், பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியை மலரச் செய்துள்ளார். அவரது நடவடிக்கையால் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பாஜக வளர்ச்சி குறித்து ஆலோசிப்பதற்காக அவர் தமிழகம் வருகிறார். அதற்கு இன்னும் 10 நாள்களே இருக்கும் நிலையில் அதிமுக உள்கட்சி குழப்பம் உச்சகட்டத்தை எட்டியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷா வரும்போது அதிமுக இரு அணிகளும் இணைந்து பல மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக அதிமுக - பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x