டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன: வடிகால் அமைக்காததே காரணம் என்கிறார் கருணாநிதி

டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன: வடிகால் அமைக்காததே காரணம் என்கிறார் கருணாநிதி
Updated on
1 min read

வடிகால் அமைக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிப் பயிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கை:

வடிகால் இல்லாத பிரச்சினையால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், அதற்குத் தீர்வு காணப்போவதாகவும், கடந்த மூன்றாண்டு காலமாக பொதுப் பணித்துறை மூலம் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான முதற்கட்டப் பணிகளைக் கூட, இதுவரை பொதுப்பணித் துறையினர் தொடங்கவில்லை. அதன் காரணமாகத்தான் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிப் பயிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன.

மின்சார வாரியத்துக்காக தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3.50-க்கு மேல் விலை கொடுத்து வாங்க வேண்டாம் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின்வாரியத்துக்கு உத்தரவிட்டது. ஆனால் மின்வாரியம் அதிக விலை கொடுத்து வாங்குவதாக குற்றச்சாட்டுகள் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கூறப் பட்டபோதிலும், தமிழக அரசின் சார்பில் எந்த விதமான பதிலும் வராததிலிருந்து கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதுகுறித்து மின் வாரியம்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

பால் விலையை வரலாறு காணாத அளவுக்கு லிட்டர் ஒன்றுக்கு ஏற்கெனவே ரூ.6.25, தற்போது ரூ.10 என்று அதிமுக ஆட்சியில் லிட்டர் ஒன்றுக்கு 16 ரூபாய் 25 காசு உயர்த்திவிட்டார்கள். அதுபோலவே ஏற்கெனவே மின் கட்டணம் உயர்த்தியது போதாதென்று, தற்போது மேலும் உயர்த்துவதற்கு வரைவினை முன்மொழிந்துள்ளார்கள். பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். அண்மையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட்டுவிட்டது. இந்தச் சுமைகளையெல்லாம் எப்படித் தாங்குவது என்று ஏழையெளிய நடுத்தர மக்கள் திணறிக் கொண்டிருக்கின்ற நிலையில், நேற்று முதல் சர்க்கரை விலையையும் கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தியிருக்கிறார்கள். பால், சர்க்கரை விலை உயர்வால் இனி காபி, டீ விலை உயரும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in