Published : 18 Aug 2017 09:07 AM
Last Updated : 18 Aug 2017 09:07 AM

ஜெ.மரணம் குறித்து விசாரணை ஆணையம்: எதிர்க்கட்சி தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும். அவர் வசித்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதல்வர் கே.பழனிசாமி நேற்று அறிவித்தார். இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

டிகேஎஸ் இளங்கோவன் (திமுக செய்தித் தொடர்பு செயலாளர்): பாஜகவின் விருப்பப்படி சசிகலா குடும்பத்தை ஓரம்கட்ட விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சியாக இதைப் பார்க்க வேண்டும். திமுகவை பொறுத்தவரை விசாரணை ஆணையம் அமைக்கப்படுவது என்பது வெறும் கண்துடைப்பே ஆகும்.

சு.திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் தலைவர்): முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அவரது மரணம் குறித்த உண்மை என்ன என்பது இந்த விசாரணையின் மூலம் எப்படியாவது நாட்டு மக்களுக்கு தெரிந்தால் நல்லதுதான்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): ஜெயலலிதா இல்லம் அரசு நினைவு இல்லமாக ஆக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

ஜெயலலிதாவின் மற்ற சொத்துகளையும் அரசுடமையாக்க வேண்டும். உட்கட்சி அரசியல் நெருக்கடி காரணமாக ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்றப்போவதாக முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அவரின் மரணம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்திருப்பது பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் (தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்): அதிமுகவின் 2 அணிகளும் மாறி மாறி பாஜக காலில் விழுந்து கொண்டிருக்கின்றன என்றபோது, இந்த அறிவிப்பும் அதைப்போலவே இருக்கும் என நினைக்கிறேன். சசிகலா குடும்பத்தினரின் தொடர்பை போயஸ் இல்லத்தில் இருந்து துண்டிக்கவே இந்த நினைவக அறிவிப்பு.

எச்.ராஜா (பாஜக தேசியச் செயலாளர்): ஜெயலலிதா மரணம் குறித்து தொண்டர்களிடம் சந்தேகம் உள்ளது. எனவே, விசாரணைக்கு உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. மேலும் அதிமுகவின் 2 அணிகளின் இணைப்புக்கு இது வழி வகுக்கும். அதிமுக விஷயங்களில் பாஜகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

அன்புமணி (பாமக இளைஞரணி தலைவர்): நீதி விசாரணை நடத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு மூலம் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதை அரசு ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்களால் எந்த உண்மையும் வராது. எனவே, ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

திருமாவளவன்: (விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்): ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. அதை தெளிவுபடுத்துவதற்கு ஏதுவாக இந்த விசாரணை அமையும் என நம்புகிறேன். வேதா இல்லம் அரசு நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதல்வர் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x