Last Updated : 11 Aug, 2017 09:33 AM

 

Published : 11 Aug 2017 09:33 AM
Last Updated : 11 Aug 2017 09:33 AM

வருமானவரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டுபிடிக்க புதிய திட்டம்: வெளிநாடு சுற்றுலா சென்றவர்களின் புகைப்படங்களை சேகரிக்க முடிவு- மத்திய அரசு அதிகாரிகள் தகவல்

வருமானவரி ஏய்ப்பு செய்பவர்களைக் கண்டுபிடிக்க சமூக வலை தளங்கள் மூலம் வெளி நாடு சுற்றுலா சென்றவர்களின் புகைப்படங்களை சேகரித்து விசாரணை நடத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வருமானவரி புலனாய்வுப் பிரிவு இயக்குநர் முரளிகுமார் கூறும்போது, “தமிழகத்தில் 2016-17-ம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் வரி ஏய்ப்பு செய்தவர்களிடம் இருந்து ரூ.3,210 கோடி மீட்கப்பட்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் கணக்கில் காட்டப்படாத ரூ.1,429 கோடி பணத்தைக் கண்டுபிடித்து மீட்டு இருக்கிறோம்.

தற்போது தகவல் தொடர்பு சாதனங்கள் மேம்பட்டு உள்ளன. இதனால் நல்ல தகவல்கள் கிடைக்கின்றன. இதைப் பயன் படுத்தி கறுப்பு பணத்தை வெற்றிகரமாக மீட்டு வருகிறோம்” என்றார்.

வரி ஏய்ப்பு செய்பவர்களைக் கண்டுபிடித்து கறுப்பு பணத்தை மீட்பதற்கான புதிய திட்டங்கள் குறித்து வருமானவரித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “வருமானவரி தாக்கல் செய்யும்போது இனி வெளிநாட்டு பயணங்கள் குறித்த விவரங் களையும் குறிப்பிட வேன்டும்.

எந்தெந்த நாடுகளுக்கு எத்தனை முறை சென்றோம், எவ்வளவு தொகை செலவு செய்தோம், செலவு செய்த தொகையில் நிறுவனம் கொடுத்த தொகை எவ்வளவு, சொந்தமாக செய்து கொண்ட செலவுகள் மற்றும் அதன் விவரங்கள், ஏதாவது ஸ்பான்சர் மூலம் சென்றிருந்தால் அதன் விவரங்கள் போன்றவைகளை ஆதாரத்தோடு குறிப்பிட வேண்டும் என்று மத்திய நேரடி வரிக் குழு தெரிவித்திருக்கிறது. ஆனால், வெளிநாடு சென்றவர்களின் பாஸ்போர்ட் எண்ணை வைத்து அவர்களைக் கண்டுபிடித்து விசாரணை நடத்தினால், சாதாரண ஒரு காரணத்தைக் கூறி தப்பிவிடுகிறார்கள்.

எனவே, இதைத் தடுக்க புதிய திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறோம். வெளிநாடு சென்றவர்கள் எப்படியும் புகைப்படம் எடுப்பார்கள். அந்தப் புகைப் படத்தை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் பதிவிடுகிறார்கள்.

ஆய்வு செய்ய தனிக்குழு

இந்தப் புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு விசாரணை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். இதனால் வெளிநாடு சென்றவர்களின் சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களின் செல்போன்களில் உள்ள புகைப் படங்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்களையும் தனிக்குழுவினர் கண்டுபிடிப்பார்கள். இதில் வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x