Published : 09 Aug 2017 08:17 AM
Last Updated : 09 Aug 2017 08:17 AM

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 சிறப்பு காவல்படை போலீஸார் கைது: பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த 3 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசாவைச் சேர்ந்தவர் பீரேந்திர ரெட்டி(23). சென்னை முகலிவாக்கத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கேரளாவில் வேலைக்கு செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடந்த 6-ம் தேதி இரவு வந்தார். ரயிலை தவறவிட்டதால் ரயில் நிலைய பயணிகள் ஓய்வறை அருகே படுத்துள்ளார். அப்போது, அங்கு வந்த சீருடை அணிந்த 3 போலீஸார், பீரேந்திர ரெட்டியை சரமாரியாக தாக்கி பணம், கைக்கடிகாரம், செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து சென்ட்ரல் ரயில்வே போலீஸ் ஆய்வாளர் சேகரிடம் பீரேந்திர ரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.

போலீஸார் நடத்திய விசாரணையில் பீரேந்திர ரெட்டியிடம் வழிப்பறி செய்தது தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ராமகிருஷ்ணன் (27), முதல்நிலைக் காவலர் இருதயராஜ் (25), காவலர் அருள்தாஸ் (24) என்பது தெரியவந்தது. ரயில்வே ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் உத்தரவின்படி, 3 பேரையும் போலீஸார் நேற்று காலை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

விசாரணையின் போது போலீஸ் அதிகாரிகளிடம் பீரேந்திர ரெட்டி கண்ணீர் வடித்தபடி கூறியதாவது: நான் பி.ஏ. படித்து வந்தபோது எனது தந்தை இறந்துவிட்டார். அண்ணன் மாற்றுத்திறனாளி. தாயாருக்கு உடல் நிலை சரியில்லை. என்னை மட்டுமே குடும்பம் நம்பி இருந்ததால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு 2 மாதத்துக்கு முன்பு சென்னை வந்தேன். முகலிவாக்கத்தில் கட்டிட வேலை செய்தேன். ரூ.300 சம்பளம் கொடுத்தார்கள். கேரளாவில் சாப்பாட்டுடன் தினமும் ரூ.350 சம்பளம் தருவதாக நண்பர் ஒருவர் கூறியதால் அங்கு செல்வதற்காக 6-ம் தேதி இரவு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தேன். கேரளாவுக்கு செல்லும் ரயில் புறப்பட்டு சென்றுவிட்டதாக ரயில்வே பணியாளர்கள் கூறியதால் மறுநாள் செல்லலாம் என நினைத்து ரயில் நிலைய பிளாட்பாரம் அருகே படுத்திருந்தேன்.

அதிகாலை 2 மணிக்கு 3 போலீஸார் வந்து, என் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து பணம், செல்போனை கேட்டு மிரட்டினர். எனது குடும்பம் பற்றி தெரிவித்து பணம் கொடுக்க மறுத்தேன். இதனால் 3 பேரும் என்னை சரமாரியாகத் தாக்கி பணம், கைக்கடிகாரம், செல்போனை பறித்துக்கொண்டனர். ‘பெற்றோரிடம் பேச வேண்டும். போனையாவது கொடுங்கள்’ என்று அவர்கள் காலில் விழுந்து கதறினேன். அதை சில பயணிகள் பார்த்துவிட்டனர். அதன் பிறகே அவர்கள் செல்போனை மட்டும் கொடுத்து விட்டுச் சென்றனர். அவர்கள் கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கும் என்று நினைத்து புகார் அளித்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

அடையாளம் கண்டது எப்படி?

ரயில்வே ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், எஸ்பி ஜியோ ஜார்ஜ், டிஎஸ்பி சிவக்குமார் ஆகியோர் பீரேந்திர ரெட்டியிடம் விசாரணை நடத்தினர். தன்னிடம் வழிப்பறி செய்தவர்களை அடையாளம் காட்ட முடியும் என அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரவு பணியில் இருந்த 18 போலீஸாரையும் போலீஸ் அதிகாரிகள் வரவழைத்து அணிவகுப்பு நடத்தினர். 3 பேர் மட்டும் வரவில்லை. இதைத் தொடர்ந்து வழிப்பறி செய்தது போலீஸார் ராமகிருஷ்ணன், இருதயராஜ், அருள்தாஸ் என உறுதி செய்யப்பட்டது.

ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது ராமகிருஷ்ணன், இருதயராஜ், அருள்தாஸ் ஆகியோரின் உருவம் தெரிந்தது. அதை வைத்தே 3 பேரும்தான் குற்றவாளிகள் என போலீஸார் உறுதியாக முடிவு செய்தனர்.

3 பேரையும் அழைத்து விசாரித்தபோது, தாங்கள் வழிப்பறி செய்யவில்லை என மறுத்தனர். சிசிடிவி காட்சிகளை காண்பித்த பிறகே உண்மையை ஒப்புக்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட ராமகிருஷ்ணன் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர். அருள்தாஸ் திருச்சி சமயபுரத்தையும் இருதயராஜ் புதுச்சேரியையும் பூர்வீகமாக கொண்டவர்கள். 3 பேரும் பூந்தமல்லியில் உள்ள 13-ம் சிறப்புக் காவல் படை பிரிவைச் சேர்ந்தவர்கள். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் குற்றங்களை தடுக்கவும் ரயில்வே போலீஸாருடன் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் 3 போலீஸாரும் ரயில் பயணிகள் குறிப்பாக வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து வழிப்பறி செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். வழிப்பறி செய்த பணத்தில் மது அருந்தியுள்ளனர். சினிமா, வணிக வளாகங்களுக்கு சென்று சொகுசு வாழ்க்கை நடத்தியுள்ளனர்.

3 பிரிவுகளில் வழக்கு

கைது செய்யப்பட்ட 3 போலீஸார் மீதும் இந்திய தண்டனை சட்டம் 341 (சட்ட விரோதமாக தடுத்தல்), 342 (சட்ட விரோதமாக அடைத்து வைத்தல்), 393 (வழிப்பறி) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழிப்பறி செய்யப்பட்ட பணம், கைக்கடிகாரம் மீட்கப்பட்டு பீரேந்திர ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது வழிப்பறி குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ள 3 போலீஸாரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x