Last Updated : 08 Aug, 2017 11:19 AM

 

Published : 08 Aug 2017 11:19 AM
Last Updated : 08 Aug 2017 11:19 AM

தமிழகம், புதுச்சேரியில் நடப்பாண்டிலும் ஏமாற்றம் அளித்த தென்மேற்கு பருவமழை: வெப்பச்சலன மழையால் கிடைத்தது ஆறுதல்

 

தமிழகம், புதுச்சேரியில் கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஏமாற்றம் அளித்த நிலையில், நடப்பாண்டும் தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் வெப்பச்சலனம் காரணமாக பெய்த மழையே சற்று ஆறுதல் அளித்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் சராசரியாக 320 மி.மீ மழை பெய்ய வேண்டும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை யிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் 440 மி.மீ மழை பெய்ய வேண்டும். கடந்த ஆண்டு தமிழகம், புதுச்சேரியில் 258 மி.மீ அளவுக்கே தென்மேற்கு பருவமழை பெய்தது. இது சராசரியைவிட 19 சதவீதம் குறைவாகும். வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்துக்கு 168 மி.மீ மட்டுமே மழை கிடைத்தது. இது, சராசரியைவிட 62 சதவீதம் குறை வாகும். இதேபோல், புதுச்சேரி யிலும் சராசரி அளவைவிட 79 சதவீதம் குறைவான மழையே கிடைத்தது.

140 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு தமிழகத்தில் மிகவும் குறைவான மழை பெய்தது. இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்கியது. கடந்த மாதம் 26-ம் தேதி வரை தமிழகத்தில் 105.7 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 72.3 மி.மீ மழை மட்டுமே பெய்தது. இது சராசரியைவிட 32 சதவீதம் குறைவாகும். இதேபோல், புதுச்சேரியில் 107.8 மி.மீ மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 88.8 மி.மீ மழை மட்டுமே பெய்தது. இது சராசரியைவிட 18 சதவீதம் குறைவாகும். வெப்பச்சலனம் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால் வெப்பச் சலனம் காரணமாக கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. கடந்த 2-ம் தேதி வரை ஒரு வாரத்தில் தமிழகத்தில் 45.5 மி.மீ மழையும், புதுச்சேரியில் 80.8 மி.மீ மழையும் பெய்தது. ஒரு வாரத்தில் தமிழகத்தில் இயல்பைவிட 235 சதவீதமும், புதுச்சேரியில 347 சதவீதமும் அதிகமாக மழை பெய்துள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறுகின்றன. இது, தென்மேற்கு பருவமழையின் பற்றாக்குறையை ஈடு செய்துள்ளது. ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 2 வரை தமிழகத்தில் 119.3 மி.மீ மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 117.8 மி.மீ மழை பெய்து, சராசரி மழை கிடைத்துள்ளது. புதுச்சேரியில் 169.6 மி.மீ மழை பெய்துள்ளது. இது சராசரியைவிட 35 சதவீதம் அதிகம் ஆகும். மழை அளவு ஒப்பீடு சென்னை, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர், திருச்சி, வேலூர், காரைக்கால் ஆகிய பகுதிகளில் சராசரி மழை கிடைத்துள்ளது. அரியலூர், தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, திருவாரூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் சராசரியைவிட கூடுதலாக மழை பெய்துள்ளது. கோவை, பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் சராசரியைவிட மிகவும் கூடுதலாக மழை பெய்துள்ளது. தருமபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம், திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் சராசரியைவிட குறைவாகவே மழை கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியைவிட மிகவும் குறைவாக மழை பெய்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சராசரி அளவைவிட 100 சதவீதம் அதிகமாகவும், தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரி அளவைவிட 61 சதவீதம் குறைவாகவும் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் சராசரி அளவுக்கு மழை பெய்திருந்தாலும், ஆறுகளில் நீர்வரத்து இல்லாமல் பெரும்பாலான அணைகள், ஏரிகள், குளங்கள் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கவில்லை. வறட்சியை போக்கும் அளவுக்கு மழை கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x