Published : 16 Aug 2017 11:20 AM
Last Updated : 16 Aug 2017 11:20 AM

சென்னை புறநகருக்கு பேராபத்தை விளைவிக்கும் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிடுக: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை புறநகருக்குப் பேராபத்துகளை ஏற்படத்தக்கூடிய குப்பை எரிஉலை திட்டத்தை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மின்சாரம் தயாரிப்பதாகக் கூறி பிளாஸ்டிக் குப்பையை எரிக்கவும், சென்னை மாநகரில் குப்பை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. உலக வங்கியின் வற்புறுத்தலால் IPE Global எனும் பன்னாட்டு நிறுவனம் மூலம் இதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் குப்பையை எரித்து மின்சாரம் எடுக்கும் எரி உலையை (Waste Incineration Plant) அமைக்கவும், சென்னை மாநகராட்சியின் 70% குப்பை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பெருங்குடியில் 26 மெகாவாட் எரி உலை, கொடுங்கையூரில் 32 மெகாவாட் எரி உலை ஆகியவை ரூ.1300 கோடியில் அமைக்கப்பட இருக்கிறது. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 5000 டன் குப்பையை எரிக்க திட்டமிட்டுள்ளனர்.

குப்பை எரிக்கும் எரி உலைகள் மிக மோசமான கேடுகளை ஏற்படுத்தக் கூடியவை. பெரும் ஊழலையும், சுற்றுச்சூழல் பேரழிவையும், கடும் உடல்நலக் கேடுகளையும், ஏழைகளின் வாழ்வாதார இழப்பையும், அரசுக்கு பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தக் கூடிய இந்த பேராபத்து திட்டம் கைவிடப்பட வேண்டும். இதற்காக நடத்தப்பட்ட கருத்துக்கேட்புக் கூட்டங்களில், எனது அறிவுரைப்படி பசுமைத் தாயகம் அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்று எரி உலை திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர்.

எரி உலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் ஒன்றாக எரிக்கப்படும். டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு, டையாக்சைடு மற்றும் ஃபியூரன் உள்ளிட்டவை வெளியாகும். காற்றில் மிதக்கும் துகள்கள், ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் ஆகியவையும் வெளியாகும். இவற்றில் பல ரசாயனங்கள் சுற்றுச்சூழலில் அழியாமல் நிலைத்திருக்கக் கூடியவை, நச்சுத்தன்மை வாய்ந்தவை, உயிரினங்களுக்குள் நிலைத்திருக்கக் கூடியவை.

இந்த நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். காற்று மாசுபாடு மட்டுமல்லாமல், எரி உலை சாம்பலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாகும்.

குப்பை எரி உலை அமைக்கப்பட்டால், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் பகுதிகளும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். தென் சென்னையில் வேளச்சேரி, மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், மேடவாக்கம், பெருங்குடி, தரமணி, வட சென்னையில் வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, மூலக்கடை, மாதவரம் போன்ற பகுதிகளில் பல லட்சம் பேர் பேராபத்தில் சிக்குவர். போபால் விபத்தில் ஒரே நாளில் ஏற்பட்ட பாதிப்பு எரி உலையால் மெதுவாக நடக்கும்.

இந்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரிக்க வேண்டும். மக்கும் குப்பையை மட்க வைக்க வேண்டும். மறுசுழற்சி குப்பையை மறுசுழற்சிக்கு அனுப்ப வேண்டும். இதுதான் அறிவியல் பூர்வமான, சட்டரீதியான குப்பை மேலாண்மை முறை ஆகும்.

மேலும், இந்திய அரசின் பிளாஸ்டிக் குப்பை மேலாண்மை விதிகள் 2016-ன் படி பிளாஸ்டிக் குப்பையை எரிப்பது குற்றம். இந்த விதிகளுக்கு நேர் எதிராக, குப்பை எரிஉலையில் பிளாஸ்டிக் உட்பட எல்லா குப்பையையும் ஒன்றாக எரிக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.

சென்னையில் ஒரு நாளில் 6000 டன் குப்பை உருவாகிறது. இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்து எடுத்துவிட்டால் - தோராயமாக 600 டன் குப்பைதான் மீதமாகும். அதாவது, அறிவியல் பூர்வமான குப்பை மேலாண்மை முறையை கையாண்டால் எரிஉலையில் எரிப்பதற்கு வெறும் 600 டன் குப்பைதான் கிடைக்கும். ஆனால், சென்னை மாநகராட்சியில் 'குப்பையை வகை பிரித்து எடுத்த பின்பு' 5000 டன் குப்பையை எரிக்கப்போவதாகக் கூறுகிறார்கள். இது மோசடியான வாதம்!

சென்னை மாநகரிலும் குப்பையை எரித்து அதிலிருந்து மின்சாரம் எடுப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமற்றது ஆகும். சென்னையில் கிடைக்கும் குப்பைகளைக் கொண்டு குப்பை எரிஉலை அமைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. குப்பையை வகை பிரிப்பது, மக்கும் கழிவுகளை மக்க வைப்பது, கழிவுகளை மறு சுழற்சிக்கு அனுப்புவது, கழித்துக்கட்டும் கழிவுகளை நிலநிரப்புவது போன்றவற்றுக்கு ஆகும்

செலவுகளை விட, குப்பை எரிஉலை அதிக செலவு பிடிக்கக் கூடியது ஆகும். கொடுங்கையூர், பெருங்குடி குப்பை எரிஉலைகளால் சென்னை மாநகராட்சி பெரும் பொருளாதார இழப்பினைச் சந்திக்கும்.

பிளாஸ்டிக் உள்ளிட்ட மறுசுழற்சி செய்யத்தக்க பொருட்களைக் குப்பையிலிருந்து பிரித்து எடுப்பதும், பழைய பொருட்களை வாங்குவதும் ஒரு தொழிலாக உள்ளது. ஆனால், குப்பை எரிஉலை மூலமாக மறுசுழற்சி செய்யத்தக்க பொருட்களை குப்பையிலிருந்து பிரித்து எடுப்பதை தடைசெய்ய முயற்சிக்கிறது சென்னை மாநகராட்சி. இதனால், இத்தொழிலை சார்ந்துள்ள பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழப்பர்.

மேலை நாடுகளின் மக்கள் குப்பை எரி உலைகளை கடுமையாக எதிர்க்கின்றனர். அமெரிக்க நாட்டில் 1991-ம் ஆண்டில் 187 எரி உலைகள் இருந்தன. ஆனால், இப்போது வெறும் 77 எரி உலைகள் மட்டுமே உள்ளன. கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் 250 நகரங்களின் மேயர்கள் ஒன்று கூடி, தங்களது நகரங்களில் எரி உலை திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய நாடாளுமன்றமும் அதன் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 'ஐரோப்பிய நாடுகள் குப்பை எரி உலைத் திட்டங்களுக்கு மானியம் வழங்கக் கூடாது' என அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறே, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எரி உலைகளை அமைப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் உதவக் கூடாது என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்தியாவில் உருவாகும் குப்பை, எரி உலைகளுக்கு ஏற்றதாக இல்லாததால் லக்னோ, புனே, கான்பூர் உள்ளிட்ட பல இடங்களில் தொடங்கப்பட்டஎரி உலைகள் தோல்வியடைந்தன. அவை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன.

குப்பை உருவாகாமல் தடுத்தல், குப்பை மறுசுழற்சி ஆகியவற்றின் மூலம்தான் புவி வெப்பமடைவதைத் தடுக்க முடியும். குப்பையை எரிப்பதால் புவி வெப்பமடைதல் அதிகமாகும். புவி வெப்பமடையக் குப்பை எரி உலைகள் காரணமாக உள்ளன. மின்சார உற்பத்தி தொழில்நுட்பங்களில் மிகவும் மாசுபடுத்தக்கூடியது எரிஉலைதான்.

நிலக்கரி அனல்மின் நிலையத்தை விட 28 மடங்கு அதிக டையாக்சின், 3 மடங்கு அதிக நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு அதிக சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு அதிக கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரிஉலையில் இருந்து வெளியாகிறது.

குப்பை எரிஉலை அமைக்க 1300 கோடி ரூபாய் செலவாகும் என்று சென்னை மாநகராட்சி மதிப்பிட்டுள்ளது. ஆனால், அதற்கான தொழில்நுட்ப விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர்.

ஐரோப்பிய தொழில்நுட்பத்தையும் விதிமுறையையும் கடைபிடிப்போம் என்று கூறினாலும், உண்மையில் சீனாவில் இருந்து மோசமான தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்யவுள்ளனர். இந்த மோசமான தொழில்நுட்பத்தையும் தனியார்மயத்தையும் உலகவங்கி சென்னை மக்களின் மீது திணிக்கிறது. இதில் பெரும் ஊழல் நடக்கிறது. எனவே, சென்னை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் குப்பை எரிஉலைகள் அமைக்கும் திட்டத்தை மாநகராட்சி முற்றிலுமாக கைவிட வேண்டும்.

இந்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 உள்ளிட்ட குப்பை மேலாண்மைக்கான விதிகளை முழுமையாக பின்பற்றி குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். பூஜ்ய குப்பை எனப்படும் குப்பையில்லா மாநகர கோட்பாட்டை சென்னை மாநகராட்சி விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x