Published : 08 Nov 2014 08:42 AM
Last Updated : 08 Nov 2014 08:42 AM

தென்மாவட்ட காங்கிரஸை உடைப்பதில் ஜி.கே.வாசனுக்கு பின்னடைவா?

தமிழ் மாநில காங்கிரஸ் உருவானபோது இருந்த ஆதரவில், தற்போது 60 சதவீதம் மட்டுமே வாசனுக்கு கிடைத்திருப்பதாகத் தெரிகிறது.

இதனால், தென் மாவட்ட காங்கிரஸை உடைப்பதில் அவருக்கு பின்னடைவு ஏற்பட் டுள்ளதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சியைத் தொடங்கியுள்ள ஜி.கே.வாசனுக்கு மாநிலம் முழுவதும் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள தென் மாவட்டங்களில், அவருக்கான ஆதரவு குறித்து அரசியல் நோக்கர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.

திருச்சி முதல் குமரி வரையிலான 11 தென்மாவட்டங்கள் அமைப்பு ரீதியாக 20 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான மாவட்டங்களில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்களே மாவட்ட தலைவர், வட்டார தலைவர் பொறுப்பு வகிக்கின்றனர். இருப்பினும், அவரது அணிக்கு 50 முதல் 60 சதவீத நிர்வாகிகளே சென்றுள்ளனர்.

இதுநாள் வரையில், வாசன் ஆதரவாளர்களாக இருந்த முன்னாள் எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தன், பெரியகுளம் முன் னாள் எம்.பி. ஜெ.எம்.ஆரூண், குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் போன்றவர்கள்கூட தாய் கட்சியி லேயே தங்கிவிட்டார்கள்.

மதுரை, நெல்லை, தூத்துக்குடியில் மொத்தம் 9 மாவட்டத் தலைவர்கள் உள்ளனர். இவர்களில் தலா இருவர் வாசன் அணிக்குச் சென்றுவிட்டனர்.

திருச்சியில் 3 மாவட்ட தலை வர்களில் ஒருவரும், திண்டுக்கல் மாவட்ட தலைவர்கள் இருவரும், ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ராமவன்னியும் வாசன் கட்சிக்கு சென்றுவிட்டனர். ஆனால், சிவகங்கை மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மதுரை வடக்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், புதுக்கோட்டை புஷ்பராஜ், திருச்சி தெற்கு ஆர்.சி. பாபு (ப.சிதம்பரம் அணி), தேனி மாவட்ட தலைவர் முருகேசன் (ஆருண் ஆதரவாளர்), தூத்துக்குடி மாநகர் தலைவர் ஏ.டி.எஸ்.அருண், திருச்சி மாநகர் ஜெரோம், (இளங்கோவன் அணி), விருதுநகர் மாவட்ட தலைவர் வேலாயுதம் ஆகியோர் தொடர்ந்து காங்கிரஸிலேயே உள்ளனர். மொத்தமுள்ள 20 மாவட்டத் தலைவர்களில் 10 பேர் மட்டுமே வாசன் அணிக்குச் சென்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு தற் போது 5 எம்.எல்.ஏ.க்களும், 2 மாநிலங் களவை உறுப்பினர்களும் உள்ள னர். இவர்கள் எந்தப் பக்கம் என குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸிடம் கேட்டபோது, “கிள்ளியூர் ஜான் ஜேக்கப், பட்டுக்கோட்டை ரங்கராஜன் தவிர, மற்ற 3 எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்து காங்கிரஸிலேயே நீடிக்கிறோம். இரண்டு எம்.பி.க்கள் மட்டுமின்றி முன்னாள் எம்.பி.க்கள் பலரும் கட்சியில் நீடிக்கிறார்கள். குமரி மாவட்டத்தில் மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகிகளாக செயல்படும் நானும், ராபர்ட் குரூஸும் கட்சியில் தொடர்கிறோம். அவர் கள் கோஷ்டியைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் மட்டும்தான் வாசன் பக்கம் சென்றுள்ளனர். தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர்” என்றார்.

வாசன் ஆதரவு நிர்வாகி பாரத் நாச்சியப்பனிடம் கேட்டபோது, “நீங்கள் சொல்வதுபோல 60 சதவீதம் பேர்தான் எங்கள் அணிக்கு வந்துள்ளார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இதுவே யாருக்கு அதிக பலம் உள்ளது என நிரூபிக்கப்பட் டுள்ளது. தொண்டர்கள் யார் பக்கம் என்பதை திருச்சி கூட்ட த்தில் நிரூபித்துக் காட்டுவோம்” என்றார்.

‘சிவகங்கை காங்கிரஸை மீட்டெடுப்போம்’

சிதம்பரத்தின் பிடியிலிருந்து சிவகங்கை காங்கிரஸை உறுதியாக மீட்டெடுப்போம் என்று சூளுரைக்கும் ஜி.கே.வாசன் தரப்பினர், சிதம்பரம் அணியில் உள்ளவர்களை தங்கள் பக்கம் இழுக்க திட்டமிட்டு அதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளனர்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த மாவட்டம் என்பதால் சிவகங்கை மாவட்ட காங்கிரஸில் எப்போதும் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் இவர்களின் செல்வாக்குதான் ஓங்கி இருக்கும். இவர்களை பகைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்பதால் வாசன் கோஷ்டியினர் இதுவரை அமைதியாகவே இருந்து வந்தனர். இப்போது, வாசன் தனிக் கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்துவிட்டதை அடுத்து, இதுநாள் வரை அமைதி காத்து வந்த சிதம்பரம் எதிர்ப்பாளர்கள் அனைவரும் வாசன் அணியில் இணைந்துவருகின்றனர். இதைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி கொண்ட வாசனும் அவரது ஆதரவாளர்களும் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் முக்கியப் பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.

இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய காரைக்குடி நகர்மன்ற உறுப்பினர் மெய்யர், “இப்போது எங்களுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. இனி இந்த மாவட்டத்தில் சிதம்பரத்துக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் வேலை இல்லை’’ என்றார்.

சிவங்கை மாவட்டத்தில் மொத்தம் 24 வட்டார தலைவர்கள் உள்ளனர். இவர்களில் 16 பேர் வாசனுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. மாவட்டத்தில் வாசன் அணியை பலப்படுத்தும் முயற்சியில் முன்னாள் எம்.பி. உடையப்பனும் யூனியன் சேர்மன் கே.கே.பாலசுப்பிரமணியனும் வட்டாரம், நகரம் வாரியாக தொடர்ந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x