Published : 04 Aug 2017 01:40 PM
Last Updated : 04 Aug 2017 01:40 PM

டெங்கு உள்ளிட்ட நோய்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை தேவை: முத்தரசன்

டெங்கு உள்ளிட்ட நோய்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர், "தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. சேலம்,கோவை,கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 5000 க்கும் மேற்பட்டோர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் உட்பட ஏராளமானோர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். கிருஷ்ணகிரியில் ஜிகா வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் போன்ற இடங்களில். பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு உள்ளிட்ட இந்த நோய்களின் பரவல் மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது .

டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுபடுத்துவதில் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்காத நிலையுள்ளது. அரசு மருத்துவமனைகள் செயல் இழந்துள்ளன. டெங்கு காய்ச்சலை கண்டுபிடிப்பதற்கான பரிசோதனை மையங்களை தமிழக அரசு உருவாக்கவில்லை. தமிழக அரசின் அலட்சிய போக்கு கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசின் மெத்தன போக்கால் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் இறப்புகள் அதிகரித்து வருகின்றன. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களை ஒழித்திட போர்க்கால நடவடிக்கை எடுத்திட வேண்டும். கொசுக்களை ஒழித்திட போதிய அளவில் நிரந்தர பணியாளர்கள் நியமிக்க வேண்டும். டெங்கு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தரமான சிகிச்சையை உத்திரவாதபடுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் வராமல் தடுத்திட பிரேசில், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்திவருகின்றன இதனால் அந்நாடுகளில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது.

டெங்கு பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தடுப்பூசிகளை பயன்படுத்திட உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. செலவை பார்க்காமல் டெங்கு பாதித்த பகுதிகளில் தமிழக அரசும் தடுப்பூசிகளை பயன்படுத்திட முன் வர வேண்டும்.

டெங்கு உள்ளிட்ட நோய்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது"

இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x