Published : 27 Aug 2017 07:32 AM
Last Updated : 27 Aug 2017 07:32 AM

எங்கள் கோரிக்கையை ஆளுநர் நிறைவேற்றுவார்: தியாகத்துக்கும் துரோகத்துக்கும் இடையே யுத்தம் - அணிகள் இணைப்புக்கு பின்னர் மவுனம் கலைத்த தினகரன்

தியாகத்துக்கும் துரோகத்துக்கும் இடையே இப்போது யுத்தம் நடக்கிறது. எங்கள் எம்எல்ஏக்களை மிரட்டவோ, பணம் கொடுத்து வாங்கவோ முடியாது. அவர்களின் கோரிக்கையை ஆளுநர் நிச்சயம் நிறைவேற்றுவார் என நம்புகிறோம் என அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

எனக்கு உடல்நிலை சரியில்லாததால் சரிவர பேச முடியவில்லை. இரண்டு, மூன்று நாட்களுக்கு எதுவும் பேச வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஒரேயொரு கேள்வி மட்டும் கேளுங்கள். கடவுளைத் தவிர என்னை யாரும் மிரட்ட முடியாது. எங்களையும் மிரட்ட முடியாது. கடவுளுக்கும், உண்மைக்கும் மட்டும்தான் நாங்கள் கட்டுப்பட்டவர்கள்.

இப்போது நடக்கும் தியாகத்துக்கும், துரோகத்துக்குமான யுத்தத்தில் தளபதிகளாக, தளகர்த்தர்களாக புதுச்சேரியில் இருக்கும் 19 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களை வாங்கிவிடுவார்கள் என்று சொல்லலாம். வாங்கிவிடுவார்கள் என்பதற்காகவோ அல்லது பயந்தோ அவர்கள் அங்கு செல்லவில்லை. இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு தியாக உணர்வோடு அங்கே சென்றிருக்கிறார்கள்.

தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய துணைக்கண்டமே தமிழகத்தில் நிலவும் இந்த சூழ்நிலையை உற்று கவனித்து வருகிறது.

எங்கள் எம்எல்ஏக்களின் கோரிக்கையை தமிழக ஆளுநர் விரைவிலேயே நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் புதுச்சேரியில் இருக்கின்றனர். ‘பணம் பாதாளம் வரை பாயும்’ என்று சில அமைச்சர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

தர்மத்தின் பக்கம்

எங்களுடன் சேர்ந்து தியாகத்துக்காகவும், கட்சியைக் காப்பற்ற வேண்டும் என்பதற்காகவும் போராடும் எம்எல்ஏக்களிடம் நிச்சயம் அந்தப் பணம் பாயாது. ஏனென்றால் அவர்கள் அந்த அணியிலே இருந்திருந்தால் என்னென்ன சலுகைகள் கிடைத்திருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். எங்களுடன் இருப்பவர்கள்தான் உண்மையில் தர்மத்தின் பக்கம் நிற்கிறார்கள்.

“இந்த இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும். பொதுச் செயலாளரை நீக்குவேன் என்று கூறியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். கட்சியை பொதுச் செயலாளர்தான் வழிநடத்த முடியும் என்பதை தமிழ் மக்களுக்கும், தமிழ்கூறும் நல் உலகுக்கு உணர்த்துவதற்காகவும், உலகத்தில் எங்கெல்லாம் தமிழ் மக்கள் வாழ்கிறார்களோ அவர்கள் எல்லாம் தமிழகத்தில் நடைபெறும் அநீதியை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான் புதுச்சேரியில் இருக்கிறார்களே தவிர, வேறு யாருக்கும் பயந்து போய் அங்கு இல்லை. கட்சியைக் காப்பற்ற வேண்டும் என்ற ஒரே நல்ல நோக்கத்தோடு நான் அவர்களோடு இணைந்திருக்கிறேன்

எங்கள் எம்எல்ஏக்களின் நியாயம் நிச்சயம் வெற்றி பெறும். தமிழக ஆளுநர் ஒரு சட்ட மேதை. விரைவில் அவர் நல்ல முடிவெடுப்பார் என்ற நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக இரு அணிகள் இணைப்புக்குப் பிறகு அமைதி காத்து வந்த தினகரன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து தனது மவுனத்தை கலைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x