Published : 14 Aug 2017 09:56 AM
Last Updated : 14 Aug 2017 09:56 AM

மனைவி, குழந்தைகள் கண் முன்னே கார் தீப்பிடித்து நிதி நிறுவன அதிபர் உயிரிழப்பு: குடும்பத்தைக் காப்பாற்றியவர் மீள முடியாததால் சோகம்

கோவை மதுக்கரை அருகே தீ விபத்துக்குள்ளான காருக்குள் இருந்து வெளியேற முடியாமல் மனைவி, குழந்தைகள் கண் எதிரே நிதி நிறுவன உரிமையாளர் இறந்தார். மனைவி மற்றும் குழந்தைகளை காப்பாற்றியவர் தீயில் இருந்து மீளமுடியாமல் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்துள்ள கோலார் பஜார் வீதியைச் சேர்ந்தவர் திலீப்குமார்(38). இவர் பெங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி ஆஷா(35). இவர்களுக்கு 13 வயதில் மகனும், 11 வயதில் மகளும் உள்ளனர். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனது அண்ணன் அசோக் வீட்டுக்குச் செல்ல நேற்று முன்தினம் குடும்பத்துடன் திலீப்குமார் காரில் புறப்பட்டார். கோவை வழியாக கேரளம் செல்ல இருந்தனர்.

கோவை அருகே கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் சென்று கொண்டிருந்தனர். மதுக்கரை சுங்கச்சாவடி அருகே கார் திடீரென பழுதானது. லேசாக மழைத் தூறல் விழுந்து கொண்டிருந்ததால், வெளியே இறங்காமலேயே காரை இயக்க திலீப்குமார் முயற்சித்துள்ளார்.

குடும்பத்தைக் காப்பாற்றினார்

அப்போது திடீரென காரில் புகை பரவி, தீப்பிடித்தது. இதில் அதிர்ச்சியடைந்த திலீப்குமார் வேகவேகமாக தனது மனைவியையும், பின்பக்கம் அமர்ந்திருந்த இரு குழந்தைகளையும் வெளியேற வைத்தார். தானும் வெளியேறலாம் என நினைத்தபோதுதான், ‘சீட் பெல்ட்’ அணிந்திருந்தது தெரியவந்துள்ளது.

தீ வேகமாகப் பரவியதால் அவசரமாக சீட் பெல்ட்டை திறக்க முயற்சித்தார். ஆனால் அது திறக்கவில்லை. அதற்குள்ளாக காரின் பின்பக்கம் வரை தீ பரவியதில் எரிபொருளும் சேர்ந்து பற்றிக் கொண்டது. கடைசி வரை வெளியே வர முடியாமல் காருக்குள்ளேயே திலீப்குமார் பலியானார். தீயை அணைத்து அவரை மீட்கப் போராடிய மனைவி, குழந்தைகள் கண் முன்னே திலீப்குமார் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார் பேட்டரியில் மின்கசிவு

இந்த சம்பவம் குறித்து மதுக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸார் கூறும்போது, ‘காரின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவே இதற்குக் காரணம். மாநகரப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக தீயணைப்பு வாகனங்கள் செல்வதில் சற்று தாமதமானது. சுங்கச்சாவடி ஊழியர்கள் சிலர் தீயை அணைக்க உதவியும் விபத்தை தவிர்க்க முடியவில்லை’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x