Published : 09 Aug 2017 08:25 am

Updated : 09 Aug 2017 08:25 am

 

Published : 09 Aug 2017 08:25 AM
Last Updated : 09 Aug 2017 08:25 AM

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் தமிழக மீனவர்கள் 49 பேர் கைது: வெடிகுண்டுகளை வீசி படகுகளை சேதப்படுத்தியதாக புகார்

49

புதுக்கோட்டை மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 49 பேரை இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது. மீனவர்களின் படகுகளை வெடிகுண்டுகளை வீசியும், ரோந்துப் படகுகளால் மோதியும் சேதப்படுத்தியதாக தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.

இலங்கை வீரர் கடத்தல்?

நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன், வெடிகுண்டுகளை வீசியும், ரோந்து படகுகளால் மோதியும் மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தியதாக தகவல் வெளியானது.

அப்போது தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்படையைச் சேர்ந்த வீரர் ஒருவரை, கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது படகில் கடத்திக் கொண்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து, மீன்வளத் துறை மாநில கூடுதல் இயக்குநர் ஜெ.எஸ்.சமீரன், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ், அறந்தாங்கி கோட்டாட்சியர் பி.வி.சந்திரன் மற்றும் மாநில புலனாய்வுத் துறை அலுவலர்கள் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் மீனவர்களிடம் நேற்று விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது, கரை திரும்பிய எந்த படகுகளிலும் இலங்கை கடற்படை வீரர் எவரும் கடத்திவரப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அப்போது, தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை அதிகாரிகளிடம் மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

கைது உறுதி செய்யப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் கடலுக்குச் சென்ற 5 விசைப்படகுகளைச் சேர்ந்த 19 மீனவர்கள், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து சென்ற 5 விசைப்படகுகளைச் சேர்ந்த 22 மீனவர்கள், ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் இருந்து 2 விசைப்படகுகளில் சென்ற 8 மீனவர்கள் என 49 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத் துச் செல்லப்பட்டனர்.

இதுகுறித்து கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது: நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 5-க்கும் மேற்பட்ட ரோந்துப் படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர்.

தப்பி வந்தோம்

தமிழக மீனவர்களின் படகுகளை இடித்து சேதப்படுத்தியதுடன், வெடிகுண்டுகளையும் வீசினர். 12 படகுகளில் இருந்த 49 மீனவர்களை சிறைபிடித்து அழைத்துச் சென்றனர். இதனால், நாங்கள் மீன்பிடிப்பதற்காக விரித்திருந்த வலைகளை அறுத்துவிட்டு கரைக்கு திரும்பினோம்.

ரோந்துப் படகைக் கொண்டு இடித்ததில், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த தனராஜ், மாரிமுத்து ஆகியோரது படகுகள் பலத்த சேதமடைந்த நிலையில் கரை திரும்பின.

கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இலங்கை கடற்படையினர் 5-க்கும் மேற்பட்ட ரோந்துப் படகுகளில் வந்து தாக்கியது இதுவே முதல்முறை.

சீனா போன்ற நாடுகள் இலங்கையுடனான உறவை பலப்படுத்திக் கொண்ட பிறகுதான், தமிழக மீனவர்கள் இதுபோன்று தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர்.

இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்வதில்லை என முடிவு செய்துள்ளனர். தொடர் வேலைநிறுத்தம் குறித்து முடிவு செய்ய உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author