2016 தேர்தல் கூட்டணிகள் எப்படி அமையும்?- 2 முக்கிய தீர்ப்புகளுக்காக காத்திருக்கும் கட்சிகள்

2016 தேர்தல் கூட்டணிகள் எப்படி அமையும்?- 2 முக்கிய தீர்ப்புகளுக்காக காத்திருக்கும் கட்சிகள்
Updated on
2 min read

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணியை அமைப்பதில் அவசரம் காட்டாமல் பொறுமையுடன் செயல்பட சில கட்சிகள் முடிவு செய்துள்ளன. 2 முக்கிய நீதிமன்ற தீர்ப்புகளை எதிர்பார்த்தே இந்த முடிவை எடுத்துள்ளன.

தமிழகத்தில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப் பதற்கான நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கிவிட்டன. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. அதற்காக, மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது. அதேநேரத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பதவியிழந்த நிலையில், இந்தத் தேர்தல் அதிமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக இருக்கும் என்பதை அக்கட்சியினரும் உணர்ந்துள்ளனர்.

ஆனால், இரு கட்சிகளும் ஊழல் வழக்குகளில் சிக்கியிருப்பதால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் கனவு காண்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, திமுக தலைமையில் அமையும் கூட்டணிகளே தேர்தலில் முக்கிய இடம் வகிக்கும் என்பதால், அவர்களோடு யார் கூட்டணி சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் பேரன், பேத்தி மணவிழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் சந்தித்து பேசியது, கூட்டணிக்கான அச்சாரமாக கருதப்பட்டது. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி என்று கருணாநிதியும் குறிப்பிட்டார்.

அந்த மகிழ்ச்சியை குலைக்கும் வகையில், ‘திமுகவுடன் கூட்டணி குறித்து துளியும் சிந்திக்கவில்லை’ என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டார் வைகோ. திமுக, அதிமுக இல்லாத கூட்டணி, பாமக தலைமையில் அமையும் என ராமதாஸும் கூறிவிட்டார். இதனால், திமுகவின் கூட்டணி முயற்சி ஆரம்பத்திலேயே தோல்வியை சந்தித்துள்ளது.

இரண்டு முக்கிய வழக்குகளின் முடிவுக்காகவே கூட்டணி அமைப்பதற்கான முடிவை கட்சிகள் தள்ளிவைத்து வருவதாக கூறப்படுகிறது.

திமுகவினர் தொடர்புடைய 2ஜி வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தேர்தலுக்கு முன்பாக தீர்ப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல், சொத்துக்குவிப்பு வழக்கிலும் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பும் சில மாதங்களுக்குள் வந்துவிடும். இந்த 2 வழக்குகளின் முடிவுதான் தமிழகத்தில் அடுத்த தேர்தல் கூட்டணியை நிர்ணயிக்கும் காரணிகளாக அமையும் என மற்ற கட்சிகள் கருதுகின்றன.

இதுகுறித்து மதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘‘மணவிழாவில் ஸ்டாலினை வைகோ சந்தித்தது அரசியல் நாகரிகம் கருதிதான். கூட்டணி பற்றி இப்போதைக்கு சிந்திக்கவில்லை என்று வைகோ சொல்லியிருந்தாலும், தாங்கள் நீண்ட கால நண்பர்கள் என்று வைகோவை கருணாநிதி ஆதரித்துப் பேசியதையும் கருத்தில் கொள்ளவேண்டும். அதனால் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கருத முடியாது. அதேநேரத்தில் 2ஜி வழக்கு முடிவுக்காகவும் காத்திருக்கிறோம்’’ என்றனர். “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ள கூட்டணியில் நாங்கள் இடம்பெறுவது சிரமம். 2ஜி வழக்கு தீர்ப்பையும் எதிர்பார்த்திருக்கிறோம்’’ என பாமகவினரும் சொல்கின்றனர்.

தேமுதிக தரப்பில் கேட்டபோது, ‘‘கூட்டணி பற்றி இப்போது ஒன்றும் சொல்ல முடியாது. அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பில்லை. ஊழல் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை தலைவர் விரும்பமாட்டார்’’ என்றனர். இடதுசாரிகள் தரப்பிலும், இதே கருத்துதான் எதிரொலிக்கிறது. இதற்கிடையே, ஜி.கே.வாசன் தொடங்கும் புது கட்சியும் கூட்டணி பந்தயத்தில் இடம் பெறக்கூடும்.

மொத்தத்தில், 2ஜி மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளின் தீர்ப்புகள்தான் தமிழகத்தில் 2016 தேர்தல் கூட்டணி அமைவதில் பெரும்பங்கு வகிக்கப்போகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in