

மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு சாதகமாகச் செயல்படும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது பற்றி மத்திய, தென் மண்டல காவல் துறை அதிகாரி களுடன் பிரவீன்குமார் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏற்கெனவே மேற்கு, வடக்கு மண்டல போலீஸாருக்கான ஆலோசனைக் கூட்டம் பிப். 12-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மத்திய, தென் மண்டல அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.
இதில் ஒவ்வொரு மாநகரம், மாவட்டத்திலும் தேர்தல் பாதுகாப்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் ஓட்டு போட வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டும் போதாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். எனவே பொதுமக்கள் அதனை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடுவதைத் தடுக்க அதிக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ‘ஓட் வித்அவுட் நோட்’ என தேர்தல் ஆணையம், சமூக அமைப்புகள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஓட்டுக்காக யாரேனும் பணம் கொடுத்தால் அதை வீடியோ எடுத்து, எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். அதன்படி சம்பந்தப்பட்ட கட்சியினர் மீது நடவடிக்கை மேற்கொள்வோம்.
தேர்தலின்போது அரசு அதிகாரிகள் எந்தக் கட்சிக்கும் சாதகமாக செயல்படக் கூடாதென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி குறிப்பிட்ட சில கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவது நிரூபிக்கப்பட்டால், அந்த அதிகாரி மீது தேர்தல் ஆணையம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள்
ஓட்டுப் போடுவதைத் தடுப் பது, கடந்த தேர்தல்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக அல்லது 15 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குகள் பதிவாகியிருப்பது, வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் இடங்கள் போன்றவை பதற்றத்துக்கு உரிய வாக்குச் சாவடிகளாக கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மத்திய பார்வையாளர் மேற்பார்வையில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். மேலும் நேரடி வீடியோ கண்காணிப்பும் மேற்கொள்ளப்படும்.
தேர்தல் ஆணையம் பரிசீலனை
மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் ஒரேகட்டமாக நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுபற்றி தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. தேர்தல் தேதி குறித்து தற்போது கூற முடியாது. வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் நோட்டா பட்டனைப் பயன்படுத்தலாம். வாக்குப் பதிவு இயந்திரங்களில் இதற்கென தனி சின்னத்தை கொண்டு வருவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.