Published : 12 Aug 2017 12:33 PM
Last Updated : 12 Aug 2017 12:33 PM

நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு; மாணவர்களை நட்டாற்றில் விட்ட தமிழக அரசு: ராமதாஸ் கண்டனம்

நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதை மாணவர்கள் சமுதாயம் மன்னிக்காது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு பெறுவதில் பினாமி அரசு தோல்வியடைந்து விட்டது. இதனால் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் மாணவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை அரசு இழைத்திருகிறது.

மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தான் நடைபெறும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தபோதே, அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், 2016ஆம் ஆண்டு முடிவடையும் வரை உறங்கிக் கொண்டிருந்த அரசு, 2017-ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் தான் நீட் தேர்விலிருந்து தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு பெறுவதற்கான இரு சட்ட முன்வரைவுகளை இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

அதன்பிறகும் கூட அவற்றுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கு எந்த முயற்சியையும் ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த விவகாரம் தீவிரமடைந்த பிறகு கடந்த மாதத்திலிருந்து தான் பெயரளவில் முயற்சி செய்தனர்.

நீட் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அரிய வாய்ப்பு குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் மூலம் கிடைத்தது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்கான சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்திய ஆளுங்கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க முடியும் என்று தமிழக ஆட்சியாளர்கள் அறிவித்திருந்தால் குடியரசுத் தலைவர் தேர்தலின் போக்கே மாறியிருந்திருக்கும்.

தமிழகத்திலுள்ள 8.50% வாக்குகள் தேர்தல் முடிவுகளை மாற்றும் சக்தி கொண்டது என்பது ஒருபுறமிருக்க, தொடக்கத்திலேயே தமிழகக் கட்சிகள் இப்படி ஒரு முடிவை அறிவித்திருந்தால், பிற மாநிலக் கட்சிகளின் முடிவிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தி இருந்திருக்கும். இதனால் தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழியற்ற நிலை உருவாகியிருந்திருக்கும். ஆனால், அதை பயன்படுத்திக்கொள்ள அரசு தவறிவிட்டது.

தமிழகத்திற்கு நீட் தேர்வுவிலிருந்து விலக்கு பெறப்படுவது உறுதி என்று கூறி மாணவர்களிடையே தவறான நம்பிக்கையை ஏற்படுத்தி வந்த பினாமி அரசு, அதை நிறைவேற்றாததன் மூலம் மாணவர்களை நட்டாற்றில் விட்டு விட்டது; அவர்களின் முதுகில் குத்தி விட்டது. இதனால் தமிழகத்தில் மொத்தமுள்ள மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 10 முதல் 20 விழுக்காடு கூட மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை. 80 முதல் 90% இடங்கள் வரை சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு கிடைக்கும்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறாவிட்டால் இத்தகைய விளைவுகள் தான் ஏற்படும் என்பது தமிழக ஆட்சியாளர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், ஆட்சியாளர்களின் தலைக்கு மேல் ஊழல் குற்றச்சாற்றுகள், வருமானவரி சோதனைகள், ஆட்சிக்கு ஆபத்து என ஏராளமான கத்திகள் தொங்கிக் கொண்டிருந்ததால், தங்கள் தலையில் கத்தி விழாமல் காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழக மாணவர்களை பினாமி அரசு பலிகொடுத்திருக்கிறது. இதை மாணவர்கள் சமுதாயம் மன்னிக்காது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த நலன்களையும், உரிமைகளையும் மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டு, ஊழல் செய்வதற்கான உரிமத்தை மற்றும் பெற்றிருக்கும் அரசின் உண்மைத் தோற்றத்தை மக்கள் நன்றாக உணர்ந்து விட்டனர். மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பினாமி அரசு செய்யும் துரோகங்களுக்கு வெகுவிரைவில் கடும் தண்டனை கிடைக்கப் போவது உறுதி"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x