Published : 09 Nov 2014 10:44 AM
Last Updated : 09 Nov 2014 10:44 AM

பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

பாம்பாற்றின் குறுக்கே புதிய அணை கட்டக்கூடாது என்று கேரள அரசை அறிவுறுத்தக் கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

கேரள மாநிலம் பட்டிசேரியில் 2 டிஎம்சி நீரைத் தேக்கிவைக்கும் வகையில் பாம்பாற்றின் குறுக்கே ரூ.26 கோடியில் அணை கட்ட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. காவிரியின் துணை நதியான அமராவதியின் துணை நதிதான் பாம்பாறு. அதன் குறுக்கே புதிய அணை கட்ட கேரள முதல்வர் அடிக்கல் நாட்டியதாகவும் அணை கட்டுவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கேரள அரசின் இந்த நடவடிக்கை, தமிழக விவசாயிகள் மத்தியில் கவலையையும் மிகுந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. புதிய அணை கட்டினால், அமராவதி ஆற்றை சார்ந்த பகுதிகளில் குடிநீர், நீர்ப்பாசனம் முற்றிலும் பாதிக்கப்படும். அமராவதி அணைக்கு நீர் வருவது தடுக்கப்படும்.

தீர்ப்பாய உத்தரவு மீறல்

பாம்பாற்று துணை படுகையில் புதிய திட்டங்கள் மேற்கொள்ள கேரள அரசு உத்தேசித்திருப்பது 5.2.2007-ம் தேதியிட்ட காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவை மீறும் செயல் ஆகும். புதிதாக ஒரு திட்டத்தை தொடங்கவேண்டுமானால், காவிரி மேலாண்மை வாரியத்தின் ஒப்புதலை யும், நதிக்கரையோர மாநிலமான தமிழ கத்தின் சம்மதத்தையும் பெறவேண்டும்.

காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவை திறம்பட நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அதற்கு காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்கு கமிட்டியையும் அமைக்க வேண்டும் என்று எங்கள் தலைவி ஜெய லலிதா மத்திய அரசை இடைவிடாமல் வலியுறுத்தி வந்திருக்கிறார்.

அவரது வேண்டுகோள் இதுவரை பரிசீலிக்கப்பட வில்லை. காவிரி மேலாண்மை வாரியம் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப் படாவிட்டால், சம்பந்தப்பட்ட மாநிலங் களால் மேற்கொள்ளப்படும் புதிய திட்டங்களை கண்காணிக்க இயலாது.

அணை கட்டுவதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனாலும், கேரள மாநில பொதுப்பணித் துறை பொறியாளர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு வந்திருப்பது, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங் கப்படலாம் என்பதை உறுதிசெய்கிறது.

இத்தகைய சூழலில், பாம்பாற்றின் குறுக்கே புதிய அணை அல்லது வேறு புதிய திட்டங்களை தொடங்க வேண்டாம் என்றும் இந்த புதிய திட்டம் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்குமாறும் கேரள அரசுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், இதுதொடர்பாக தமிழக அரசின் அனுமதி பெறும் வரையும், காவிரி மேலாண்மை வாரியம் ஏற்படுத்தப்படும் வரையும் எந்த புதிய திட்டத்தையும் தொடங்கவேண்டாம் என்று அறிவுறுத்துமாறும் வேண்டுகிறேன்.

தமிழக மக்கள் நலனை பாதுகாக்க தாங்கள் இப்பிரச்சினையில் தலையிட வேண்டும். காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவை திறம்பட செயல்படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்கு கமிட்டி அமைக்கவேண்டும். இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x