நெல்லையை அதிர வைத்த ஓ.பி.எஸ். - அதிமுக தொண்டர்கள் யார் பக்கம்?

நெல்லையை அதிர வைத்த ஓ.பி.எஸ். - அதிமுக தொண்டர்கள் யார் பக்கம்?
Updated on
1 min read

பாளையங்கோட்டையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் திரண்ட கூட்டத்தால், தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து, சசிகலா குடும்பத்துக்கு எதிராக அளித்த பேட்டி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சசிகலா அதிருப்தியாளர்கள் ஏராளமானோர் ஓ.பன்னீர்செல்வம் பின்னால் அணி திரண்டனர்.

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கேட்டு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்களில் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டம் அதிகம் திரண்டது. பின்னர், மாவட்டம்தோறும் மக்களை சந்திக்க திட்டமிட்ட ஓ.பன்னீர்செல்வம், கடந்த மே 5-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் கூட்டத்தை நடத்தினார். 6 மாவட்டங்களில் ஏராளமான கூட்டத்தைத் திரட்டி தனது பலத்தை காட்டியுள்ள அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) கட்சியினர், நேற்று முன்தினம் பாளையங்கோட்டையில் 7-வது கூட்டத்தை கூட்டினர். இதிலும், ஓ.பன்னீர்செல்வம் பேச்சை கேட்க ஏராளமானோர் திரண்டு வந்தனர்.

அதிமுகவில் அணிகள் அதிகரித்துள்ள நிலையில், எந்தப் பக்கம் செல்வது என்ற குழப்பத்தில் ஏராளமான தொண்டர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) கட்சி ஆதரவாளர்கள் கூறும்போது, “முதல்வர் பழனிசாமி பங்கேற்கும் எந்த கூட்டத்திலும் இந்த அளவுக்கு கூட்டம் திரளவில்லை. சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்து கட்சியை மீட்க ஓ.பன்னீர்செல்வம் பின்னால்தான் பெரும்பான்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள்” என்றனர்.

அதிமுக (அம்மா) கட்சி ஆதரவாளர்கள் கூறும்போது, “தேர்தல் ஆணையத்தில் 85 சதவீத நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவாக பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர். பதவி கிடைக்காத விரத்தியில் இருந்தவர்கள் மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றுள்ளனர். ஒவ்வொரு கூட்டத்துக்கும் பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வருகிறார்கள். கட்சியை டி.டி.வி.தினகரன் திறம்பட வழிநடத்துவார். இப்போது அதிமுக (அம்மா) கட்சியில் உள்ள குழப்பங்கள் விரைவில் சரியாகிவிடும்” என்றனர்.

எனினும், மூத்த தொண்டர்கள் கூறும்போது, “பிரிந்து கிடக்கும் அணிகள் ஒன்றுபட்டால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். வருங்காலத்தில் ஒரே கட்சியாக அதிமுக எழுச்சி பெறும்” என்று நம்பிக்கையோடு கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in