Published : 27 Aug 2017 11:42 am

Updated : 27 Aug 2017 11:42 am

 

Published : 27 Aug 2017 11:42 AM
Last Updated : 27 Aug 2017 11:42 AM

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை: மருத்துவ கல்வி இயக்குநர் எச்சரிக்கை

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தமிழக அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தைவிட கூடுதலாக பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கி வருகிறது. மத்திய அரசின் உத்தரவின்படி இந்த ஆண்டு முதல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மதிப்பெண் அடிப்படையில் தொடங்கியுள்ள கலந்தாய்வு வரும் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.


கல்விக் கட்டணம்

இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2017-18-ம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் நிர்ணயித்துள்ளனர். அதன்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களுக்கு ரூ.13,600 எனவும், பிடிஎஸ் இடங்களுக்கு ரூ.11,600 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ் இடங்களுக்கு ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரையும், பிடிஎஸ் இடங்களுக்கு ரூ.2 லட்சம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ் இடங்களுக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் முதல் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் வரையும், பிடிஎஸ் இடங்களுக்கு ரூ.6 லட்சம் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ் இடங்களுக்கு ரூ.24,000 நிர்ணயித்துள்ளனர்.

கூடுதல் பணம்

ஒவ்வொரு ஆண்டும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக பணம் வசூலிக்கின்றனர். மாணவர்களின் எதிர்க்காலத்தைக் கருத்தில் கொண்டு, பெற்றோர் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கின்றனர். கடந்த ஆண்டு வரை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த கல்லூரி நிர்வாகத்தினர் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு மாணவர்களை சேர்த்து வந்தனர். இந்த ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தமிழக அரசே மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்துகிறது. அதனால், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

புகார் அளிக்கலாம்

இதுதொடர்பாக கல்விக் கட்டண குழுவின் உறுப்பினரும், மருத்துவக் கல்வி இயக்குநருமான (டிஎம்இ) எட்வின் ஜோவிடம் கேட்டபோது, “தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் பணம் கேட்பதாக இதுவரை யாரும் புகார் தெரிவிக்கவில்லை. அப்படி தனியார் மருத்துவக் கல்லூரிகள் கூடுதலாக பணம் கேட்டால் பயப்படாமல் மாணவர்கள், பெற்றோர் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். சம்பந்தப்பட்ட கல்லூரி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


You May Like

More From This Category

More From this Author