Published : 06 Jun 2017 08:09 AM
Last Updated : 06 Jun 2017 08:09 AM

தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவில் 3-வது அணி: முதல்வர் பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழக்கிறதா?

அதிமுகவில் தற்போது தினகரன் தலைமையில் மூன்றாவது அணி உருவாகியுள்ளது. இந்த அணிகளால் முதல்வர் கே.பழனிசாமியின் அரசு பெரும்பான்மை பலத்தை இழக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. முதல்வர் பதவிக்கு சசிகலா ஆசைப்பட்டதால், அவருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கி னார். இதனால் ஓபிஎஸ், சசிகலா தலைமை யில் இரு அணிகளாக அதிமுக பிரிந்தது. சசிகலா அணிக்கு எம்எல்ஏக்கள் பலம் அதிகமிருந்ததால் அவரது ஆதரவுடன் கே.பழனிசாமி முதல்வரானார். அவரது தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா, கட்சியை கவனிக்க டிடிவி தினகரனை துணைப் பொதுச்செய லாளராக நியமித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் இரட்டை இலை சின்னத்துக்கு இரு அணிகளும் சொந்தம் கொண்டாடின. அதனால், அதிமுக கட்சிப் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் தற் காலிகமாக முடக்கி வைத்தது. ஆனால், ஆர்.கே.நகர் தேர்தல் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

அதன்பின், இரட்டை இலை சின் னத்தை மீட்பதற்காக அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க திட்டமிட்டனர். சசிகலா குடும்பத்தை நீக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை விதித்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 17-ம் தேதி அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கூடி ஆலோசித்து, தினகரன் மற்றும் அவரை சார்ந்தவர்களை கட்சியை விட்டு ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக தினகர னும் தெரிவித்தார். அதன்பிறகும் இணைப் புக்கான பேச்சுவார்த்தை தொடங்கப் படவில்லை.

இந்நிலையில், இரட்டை இலை சின் னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், தினகரனை டெல்லி போலீஸார் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தனர். கடந்த 2-ம் தேதி சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான டிடிவி தினகரன், கட்சிப் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என அறிவித்தார்.

மேலும், 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக் கள் டெல்லி சென்று தினகரனை வர வேற்று அழைத்து வந்தனர். அவர்கள் அனைவரும் சென்னையில் தினகரனுடன் ஆலோசனை நடத்தியதுடன், பெங்க ளூரு சென்று சசிகலாவையும் சந்தித் தனர்.

இதற்கிடையே, தலைமைச் செயலகத் தில் நேற்று ஆலோசனை நடத்திய பிறகு நிருபர்களிடம் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, ‘‘தினகரனை ஒதுக்கி வைத்த முடிவில் உறுதியாக இருக் கிறோம். யாரும் தினகரனை சென்று பார்க்க மாட்டோம்’’ என தெரிவித்தார். அதேபோல, தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் எம்எல்ஏக்களும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். இந்த நிகழ்வுகள், அதிமுகவில் ஓபிஎஸ், முதல்வர் பழனிசாமி அணிகள் தவிர தினகரன் தலைமையில் ஒரு அணி உருவாகியுள்ளதை உறுதிப் படுத்தியுள்ளது.

ஏற்கெனவே ஓபிஎஸ் அணியில் 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். இப்போது தினகரனுக்கு ஆதரவாக 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இப்படி அதிமுக எம்எல்ஏக் கள் 3 அணிகளாக பிரிந்து இருப்பதால் முதல்வர் கே.பழனிசாமியின் அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் பழனிசாமி அரசுக்கு 121 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந் தனர். அதில் தற்போது தினகரனுக்கு ஆதரவாக 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் செயல்பட்டு வருவதால் பழனிசாமியின் அரசு தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திவாகரன் ஆதரவாளர்கள்

மேலும், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்களில் சிலர், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். ஒருவேளை முதல்வர் பழனிசாமி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கினால், திவாகரன் ஆதர வாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழலும் உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்பேரவை வரும் 14-ம் தேதி கூடுகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பம், பேரவை கூட்டத்திலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. ஒரு வேளை, மானிய கோரிக்கைகளை நிறைவேற்றுவது, சட்டங்களை நிறை வேற்றுவதில் 3 அணிகளும் தனித்தனி யாக செயல்பட்டால், முதல்வர் கே.பழனி சாமி அமைச்சரவைக்கு சிக்கல் ஏற்படும் என்பதே அரசியல் நோக்கர்கள் கருத் தாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x