

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிப்பதையே முதல் இலக்காக கொண்டு அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு நடக்கும் என்று ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகள் இடையே நேற்று நள்ளிரவு (செவ்வாய்க்கிழமை) ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பொன்னையன், "தினகரன் கைது செய்யப்பட்டிருப்பது நியாயமான நடவடிக்கை. ஜெயலலிதாவுக்கு நீண்ட காலமாக என்ன என்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டது, அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது என்ன? போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளும் உரிமை அதிமுக தொண்டர்களுக்கு உள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிப்பதையே முதல் இலக்காக கொண்டு அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு நடக்கும். இதற்காக தான் இரு அணிகளும் இணையும் முயற்சிக்கு தங்கள் அணி ஒப்புதல் தெரிவித்தது" என்று கூறினார்.
இன்று மாலைக்கு மேல் இரு அணிகளும் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.