Published : 15 Aug 2017 10:39 AM
Last Updated : 15 Aug 2017 10:39 AM

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான ‘லுக்-அவுட்’ நோட்டீஸ்: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை; வெளிநாடு செல்லவும் தடை விதிப்பு

கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து அவருக்கு எதிராக மத்திய அரசு பிறப்பித்த ‘லுக்-அவுட்’ நோட்டீஸூக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்திராணி, பீட்டர் முகர்ஜியின் ‘ஐஎன்எக்ஸ் மீடியா’ நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றுத் தருவதற்காக மொரீஷியஸில் இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உட்பட 5 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ 2 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இதை யடுத்து அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவரை தேடப்படும் நபராக அறிவித்து அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் சுற்றறிக்கையை மத்திய அரசு அனுப்பி வைத்தது.

இந்த ‘லுக்-அவுட்’ நோட்டீஸை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம், சி.பி.என்.ரெட்டி, ரவி விஸ்வநாதன், மோகனன் ராஜேஷ், பாஸ்கரராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 5 பேருக்கும் எதிராக பிறப்பிக்கப்பட்ட ‘லுக்-அவுட்’ நோட்டீஸூக்கு செப்டம்பர் 4-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கக் கோரி தலைமை நீதிபதி அமர்வில் முறையீடும் செய்யப்பட்டது.

அதன்படி, தலைமை நீதிபதி ஜெ.எஸ்.ஹெகர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நேற்று பிற் பகலில் நடந்தது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக தொடரப்பட்ட இந்த வழக்கில் இதுவரை கார்த்தி சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை. முன்ஜாமீனும் பெறவில்லை. அதனால்தான் அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது’’ என வாதிட்டார்.

வெளிநாடு செல்லவும் தடை?

அதைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 5 பேருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த ‘லுக்-அவுட்’ நோட்டீஸூக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர். மேலும் இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 5 பேரும் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x