

புதுச்சேரியில் மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதைத் தடுக்க போலீஸார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆரம்பத்தில் கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறிப்பது போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வந்தன. அதன் பின்னர் அரசு எடுத்த துரித நடவடிக்கையால் கொலை, மிரட்டி பணம் பறிப்பு சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அதிகளவில் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
குற்றங்களை தடுக்கும் வகையில் காவல் துறையில் பல்வேறு பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. குற்றங்களை தடுக்கவும், ரோந்துப் பணியை தீவிரப்படுத்தவும் 24 மணி நேரமும் நிரந்தரமாக ரோந்தில் ஈடுபடும் வகையில் ரோந்து பொறுப்பு அதிகாரி (பீட் ஆபிசர்) முறையும் அமல்படுத்தப்பட்டது.
இவர்களின் பணி குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்போர் குறித்த விவரங்கள், சமூக விரோதிகள், சந்தேக நபர்கள், சட்டம் ஒழுங்கு போன்றவைகள் தொடர்பான விவரங்களை சேகரித்து உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கவும், தடுக்கவும் இத்தகைய போலீஸார் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆயினும் செயின்பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. தற்போது திருட்டு சம்பவங்கள் ஓரளவு குறைந்திருந்தாலும், செயின்பறிப்பு என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக தனியாக நடந்து செல்லும் பெண்கள், மூதாட்டிகளை குறிவைத்து கொள்ளையர்கள் செயின்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருவதை கட்டுப்படுத்த முடியாத நிலையே உள்ளது.
கடந்த மாதத்தில் மட்டும் வில்லியனூரில் சிவகாமி என்ற பெண்ணிடம் 6 பவுன், குண்டுப்பாளையம் மூதாட்டி தயாளம்மாளிடம் 4 பவுன், உழவர்கரை பிரன்ட்ஸ் நகர் மூதாட்டி லட்சுமிபாயிடம் 5 பவுன், கதிர்காமம் பாரதி வீதியைச் சேர்ந்த மூதாட்டி பாக்கியலட்சுமியிடம் 5 பவுன் என பலரிடம் செயின்பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் பெண்கள், மூதாட்டிகள் வீட்டை விட்டு தனியாக வெளியே சென்று வர அச்சப்படுகின்றனர்.
மேலும், செயின்பறிப்பு சம்பவங்கள் பெரும்பாலும் காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போதும், கோயிலுக்கு சென்று வரும் நேரங்களிலும் கொள்ளையர்கள் நோட்டமிட்டு அரங்கேற்றுகின்றனர். இச்சம்பவங்களுக்கு அதிவேக பைக்குகள், ஹெல்மெட் போன்றவற்றை கொள்ளையர்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.
செயின்பறிப்பு சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; செயின் பறிபோனது என்பதை மட்டும் பார்க்காமல் பறிகொடுத்தவர்களின் மனம் படும்பாடு, அச்சம் போன்றவைகளையும் சிந்தித்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்; செயின்பறிப்பு சம்பவம் நடைபெறாமல் தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்; குற்றவாளிகளை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.