Published : 23 Aug 2017 09:31 AM
Last Updated : 23 Aug 2017 09:31 AM

அதிகப்படியான கட்டணம், அபராதம் விதிப்பதால் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த ஆர்வம் குறைந்த உரிமையாளர்கள்: தமிழகம் முழுவதும் தேக்கநிலை

கட்டிடங்களை வரன்முறைப்படுத்த அதிகப்படியான அபராதம் மற்றும் கட்டணம் வசூலிக்கப்படுவதால் 113சி விதிகளின் கீழ் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த கட்டிட உரிமையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த 113சி விதிகளை வீட்டுவசதி மற்றும் நகரமைப்புத் துறை அமல்படுத்தியது. இந்த விதிகளின்படி கட்டிடங்களை வரன்முறைப்படுத்த இணையதளம் மூலம் டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ-வில் விண்ணப்பிக்க வேண்டும். நீண்ட நாளுக்கு பின்னர் இணையதளப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், கட்டிடங்களை வரன்முறைப்படுத்த கட்டிட உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் ஒரு கட்டிடம் கூட வரன்முறைப்படுத்தப்படவில்லை என்று நகரமைப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

காரணம் என்ன?

விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த அபராதமும் வரன்முறை கட்டணமும் வசூலிக்கப்படும் என விதிகளில் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் விதிமீறல் கட்டிடங்களை வரன் முறைப்படுத்தவில்லைஎன்றால் கட்டிடங்களை இடிக்க நேரிடும். இதனால் சிறிய அளவிலான விதிமீறல் செய்த கட்டிட உரிமையாளர்களே பயன்பெறும் நிலை உள்ளது. ஆனால் அதிகப்படியான கட்டணமும் அபராதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பலர் விண்ணப்பிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து இந்திய கட்டுநர் சங்க செயலாளர் ராம்பிரபு கூறியதாவது: அரசு தற்போது நிர்ணயித்துள்ள கட்டணம் மிகவும் அதிகம். தமிழகத்தில் வழிகாட்டு மதிப்பின் அடிப்படையில் வரன்முறைக் கட்டணம் நிர்ணயித்துள்ளனர். ஆனால் பிற மாநிலங்களில் அவ்வாறு செய்யாமல் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே மாதிரியான குறைந்த கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர்.

200 மடங்கு கட்டணம்

குறிப்பாக சென்னை அடையாறு பகுதியில் ஒரு சதுர அடிக்கு ரூ. 6 ஆயிரத்துக்கு மேல் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது. அதுபோக வரன்முறைக் கட்டணம் 200 மடங்கு செலுத்த வேண்டும். உதாரணமாக, அடையாறில் 7 ஆயிரம் சதுர அடி உள்ள ஒரு கட்டிடத்தை வரன்முறைப்படுத்த கணக்கிட்டால் ரூ.1 கோடிக்கு மேல் ஆகும். இந்த தொகையில் அதே பகுதியில் வேறு வீட்டையே வாங்கிக் கொள்ளலாம்.

113சி விதியின் மூலம் கட்டிட உரிமையாளர்களுக்கும், அரசுக்கும் பலன் ஏற்பட வேண்டுமென்றால் கட்டணத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு ராம்பிரபு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x