Published : 24 Aug 2017 10:19 AM
Last Updated : 24 Aug 2017 10:19 AM

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் செப்.7 முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு திட்டவட்ட அறிவிப்பு

கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் திட்டமிட்டபடி செப்டம்பர் 7 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பெ.இளங்கோவன், ஜெ.கணேசன் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ விடுத்த அழைப்பை ஏற்று, 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுகள்.

கடந்த ஜூலை 18-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டம், அதைத்தொடர்ந்து, கடந்த 5-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணி, தமிழக அரசின் எச்சரிக்கையையும், மிரட்டல்களையும் மீறி செவ்வாய்க்கிழமை நடந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் என ஜனநாயக வழிகளை மேற்கொண்ட பின்னரும் கோரிக்கைகள் குறித்து ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வராதது கடும் கண்டனத்துக்குரியது.

கோரிக்கைகளை பெறுவதற்காக ஜாக்டோ-ஜியோ ஏற்கெனவே எடுத்த முடிவின்படி, செப்டம்பர் 7-ம் தேதி முதல் நடைபெறவுள்ள தொடர் வேலைநிறுத்தம், முற்றுகைப் போராட்டம், சிறை நிரப்புப் போராட்டம் ஆகியவற்றுக்காக வருகிற 26, 27-ம் தேதிகளில் நடைபெறும் ஆயத்த மாநாடுகளில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும். கோரிக்கைகளை பெறும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்ற உறுதியோடு செப்டம்பர் 7-ம் தேதி நடைபெறவுள்ள தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x