Published : 24 Apr 2017 01:35 PM
Last Updated : 24 Apr 2017 01:35 PM

ஊடகங்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தும் அதிமுக அணிகள்

இரு கோரிக்கைகள் தவிர, வேறு எந்த நிபந்தனையும் கிடையாது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து நிபந்தனை இல்லாமல் பேச எப்பொழுதும் தயார் என்று அதிமுக அம்மா அணியின் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார். இதனால் அணிகள் இணைவதில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தொடர்ந்து ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

இந்நிலையில், நிருபர்களிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி கூறியதாவது:

ஜெயலலிதா இயற்கையான முறையில் மரணமடையவில்லை. அவரின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. கழக தொண்டர்கள் அனைவரும் அவர் கொலை செய்யப்பட்டார் என்று ஆறாத்துயரம் அடைந்துள்ளனர். அதைப் போக்கவும், நீதியை நிலை நாட்டவும் சிபிஐ விசாரணை வேண்டும். அது குறித்து மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

மாபெரும் இயக்கத்தைக் கபளீகரம் செய்துகொண்டிருக்கும் சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினரை முழுமையாகக் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

இந்த இரண்டு கோரிக்கைகளை மட்டுமே முன்வைத்துள்ளோம். இதைத் தவிர வேறு எந்த நிபந்தனையும் கிடையாது.

'தலைவர்களை வேறு யாரோ இயக்குகின்றனர்'

இரு அணிகளும் பிளவுபட்ட நிலையில், எதிர் அணியில் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறி குழு அமைத்துள்ளதாக அறிவித்தனர். இத்தனை நாட்களாக உடனிருந்தவர்கள் அழைக்கிறார்களே என்று அதை மதித்து நாங்களும் 7 பேர் கொண்ட குழுவை அமைத்தோம்.

பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறியவர்கள், எங்களை அழைப்பார்கள் என்று நினைத்தோம். பேச்சுவார்த்தையில்தான் கோரிக்கைகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. கட்டுப்பாடில்லாத சூழ்நிலையில் சில தலைவர்கள் கருத்துகளைக் கூறினர். இதிலிருந்து அவர்களை வேறு யாரோ இயக்குவது தெரியவருகிறது.

இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

நிபந்தனை இல்லாமல் பேச எப்பொழுதும் தயார்: அதிமுக அம்மா அணி வைத்திலிங்கம் அறிவிப்பு

கே.பி.முனுசாமி பேசியதைத் தொடர்ந்து உடனடியாக செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம், ''ஓபிஎஸ் அணியினர் ஆரம்பத்தில் இருந்தே பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். காரண, காரியங்கள் தேடித் தேடி, பேச்சுவார்த்தையை மறுக்கின்றனர்.

எந்தப் பிரச்சினையும் கூடிப் பேசி, விவாதித்தால் தீர்ந்துவிடும். நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும், எந்த நிபந்தனையும் இல்லாமல், உட்கார்ந்து பேசத் தயாராக உள்ளோம்.

சசிகலா பதவி குறித்து எப்போது முடிவு?

இரு அணி இணைப்பு குறித்து கே.பி.முனுசாமிக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளோம்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டால், அரசாங்கம் அதை முன்னேற்று நடத்தும்.

சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் நியமனம் குறித்த வழக்கு, தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. ஆணையத்தின் தீர்ப்பின்படி, சசிகலா பதவி குறித்து முடிவெடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை என ஓபிஎஸ் தரப்பும், நிபந்தனை இல்லாமல் பேச எப்பொழுதும் தயார் என்று அதிமுக அம்மா அணியும் கூறியுள்ளதால் அதிமுக அணிகள் இணைவதில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x