சசிகலா, தினகரன் ராஜினாமா: ஓபிஎஸ் அணியின் அடுத்த எதிர்பார்ப்பு?

சசிகலா, தினகரன் ராஜினாமா: ஓபிஎஸ் அணியின் அடுத்த எதிர்பார்ப்பு?
Updated on
1 min read

அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை சசிகலாவும், துணை பொதுச்செயலாளர் பதவியை டிடிவி.தினகரனும் முறைப்படி ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே ஓபிஎஸ் அணியின் அடுத்த எதிர்ப்பார்பு எனக் கூறுகிறது நம்பத்தகுந்த வட்டாரம்.

அதிமுகவில் இருந்து ஒதுங்கிவிட்டதாக டிடிவி தினகரன் அறிவித்து விட்டதால் அதன் இரு அணிகளும் இணைவதில் இருந்த தடைகள் நீங்கிவிட்டனவா என்று கேட்டால் முழுமையாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி தரப்பில் 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) பேசிய இரண்டு மூத்த தலைவர்கள் கூறியதாவது:

"தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது என தமிழக அமைச்சர்கள் அறிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம்.

அந்த அறிவிப்புக்கு ஏற்றபடி செயற்திட்டத்துடன் அதிமுக அம்மா அணியினர் எங்களை அணுகுவார்கள் என எதிர்பார்த்திருக்கிறோம்.

தினகரன் குடும்பத்தாரை ஒதுக்கிவைப்பது என்பது இப்போதைக்கு அறிவிப்பு என்ற அளவிலேயே இருக்கிறது. இதற்கு முழுவடிவம் கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் இருவரும் தத்தம் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

இதனால், இரு அணிகள் இணைவதில் ஓபிஎஸ் அணியின் அடுத்த எதிர்பார்ப்பு இதுவாகத்தான் இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முதல்வர் பதவிக்கு குறிவைக்கிறாரா ஓபிஎஸ்?

அதேவேளையில், இரு அணிகளும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதே அந்த அணியின் முக்கிய நிபந்தனையாக இருக்கும் என்று அந்த அணியைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியை துணை முதல்வராக்கவும் ஓபிஎஸ் அணி தயாராக இருக்கிறது என அந்த அணியைச் சேர்ந்த மற்றுமொருவர் நம்மிடம் கூறினார்.

ஆனால், ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, "இரு அணிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையே தொடங்காத நிலையில் கோரிக்கைகள், நிபந்தனைகளுக்கு இடமேது" என்று ஓபிஎஸ். முதல்வராக திட்டமிடுவதாக சலசலக்கப்படும் தகவல்களை திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

'ஓபிஎஸ் நிபந்தனைகள்' என்ற பெயரில் தகவல்கள் உலாவரும் வேளையில்தான் நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, "முதல்வராக எடப்பாடி பழனிசாமியே தொடர்வார். அவரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. 122 எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவு அளித்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையையும் அவர் நிரூபித்திருக்கிறார்" எனக் கூறினார்.

ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த இதுவரை குழு ஏதும் அமைக்கப்படவில்லை என்றும் ஓபிஎஸ் அணிகள் நிபந்தனைகள் விதித்திருப்பதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என்றும் மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கிறார்.

இத்தகைய சூழலில் க்ரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in