Published : 28 Aug 2017 03:09 PM
Last Updated : 28 Aug 2017 03:09 PM

ஆட்சியைக் கவிழ்க்க அதிமுகவினரே தயாராகிவிட்டனர்: ஸ்டாலின்

ஆட்சியைக் கவிழ்க்க அதிமுகவினரே தயாராகிவிட்டனர். நிம்மதியான, நேர்மையான, மக்களுக்கான ஆட்சியாக தலைவர் கருணாநிதி தலைமையில் பீடுநடைப் போடக்கூடிய திமுக விரைவில் உதயமாகப் போகிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்.

விருத்தாசலத்தில் இன்று நடைபெற்ற, கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சி.வெ.கணேசன் இல்லத் திருமண விழா விருத்தாசலத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஸ்டாலின் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

''இங்குபேசியவர்கள் எல்லாம், என்னைப் பற்றிப் பேசும்போது, முன்னால் ஒரு வார்த்தையை போட்டு பேசினார்கள். வருங்காலம், விரைவிலே, அதிலும் பாரதி கொஞ்சம் அளவுக்கு மீறியும் சென்று, நான் சென்னை சென்று சேரும் முன்பே என்றெல்லாம் சொன்னார். ஆனால், நம்மைப் பொறுத்தவரையில், தலைவர் கருணாநிதி நமக்குக் கற்றுத் தந்துள்ள கொள்கையின்படி கொல்லைப்புறமாக அல்ல, மக்களின் உள்ளத்தைத் தொட்டு, மக்களின் வாக்குகளைப் பெற்று, அந்த ஜனநாயகப் பொறுப்பை நாம் ஏற்க வேண்டும். பொறுப்புக்காக அலைகிறோம் என்று எண்ண வேண்டாம். ஏற்கெனவே ஐந்து வருடம் ஆட்சியில் இல்லை. இப்போது ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இல்லை என்ற காரணத்தால் மூலையில் போய் முடங்கிவிட்டோமா? ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பல பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த ஆட்சியைப் பொறுத்தவரையிலும் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள, முதல்வர், அமைச்சர் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள அலைந்து கொண்டு, துடித்துக் கொண்டு இருக்கிறார்களே தவிர, மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்களா? நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் நூற்றுக்கணக்கான விவசாயப் பெருங்குடி மக்கள் தற்கொலை செய்துகொண்டு மாண்டு போன கொடுமை, துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாக்கப்பட்டுள்ள கொடுமை, இந்தியாவின் தலைநகராக உள்ள டெல்லிக்குச் சென்றுப் பலவிதமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள், அரை நிர்வாணப் போராட்டம், முழு நிர்வாணப் போராட்டமெல்லாம் நடத்தி வருகிறார்கள்.

அதுபற்றி இன்றைக்கு மத்தியில் உள்ள ஆட்சியோ, மாநிலத்தில் உள்ள ஆட்சியோ கவலைப்படுகிறதா? நெடுவாசலில் இன்றும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அரசு ஊழியர்கள் ஒருபக்கம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர்கள் ஒருபக்கம் போராடுகிறார்கள். மக்கள் நலப் பணியாளர்கள் பிச்சை எடுத்துக்கொண்டு அலையும் கொடுமை. இதுபற்றி எல்லாம் சிந்திக்காமல், ஆட்சியை எப்படித் தக்க வைத்துக் கொள்வது, பதவிகளில் எப்படி ஒட்டிக் கொண்டிருப்பது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதே அதிமுகவில் 19 எம்.எல்.ஏ.க்கள், 'இந்த ஆட்சி எங்களுக்குத் தேவையில்லை, முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கக்கூடாது' என்று தனித்தனியாக கடிதம் எழுதி ஆளுநரிடம் தந்துவிட்டு வந்திருக்கிறார்கள். அதிமுகவின் பெரும்பான்மை எண்ணிக்கைக் குறைந்து விட்டது. மெஜாரிட்டி ஆட்சி இன்று மைனாரிட்டி ஆட்சியாக மாறியுள்ளது. இந்தநிலையில் ஆளுநர் என்ன செய்திருக்க வேண்டும்? பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்த சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என சபாநாயகருக்கு உத்தரவிட்டு இருக்க வேண்டுமா, இல்லையா?

பிரிந்திருந்த 2 பேர், ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோர் ஒன்று கூடினார்கள். அவர்கள் கூடுவதற்கு ஓபிஎஸ் தனது வீட்டிலிருந்துப் புறப்பட்டு கட்சி அலுவலகத்துக்கு காரில் புறப்படுகிறார். இன்னும் அவர்கள் இருவரும் நேரில் பேசவில்லை, ஒப்பந்தம் ஆகவில்லை. அதை முடிவு செய்ய புறப்பட்டுப் போகிறார், ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் காத்திருந்த அதிமுக அலுவலகத்துக்குச் செல்வதற்கு முன்பே, கோட்டையில் இருந்த தலைமைச் செயலாளர் கிளம்பி ஆளுநர் மாளிகைக்குச் சென்று, ஆளுநரைச் சந்திக்க அப்பாயின்மெண்ட் வாங்கி விட்டார். மும்பையில் ஆளுநருக்கு 3 நிகழ்ச்சிகள் இருந்தன. அவற்றையெல்லாம் ரத்து செய்துவிட்டு, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசர அவசரமாகப் புறப்பட்டு சென்னைக்கு வந்து விட்டார். இங்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே வந்து, காத்துக் கொண்டிருக்கிறார். பதவிப் பிரமாணம் நடத்த நேரமெல்லாம் குறிக்கப்பட்டது.

அதன் பிறகு இரண்டு பேரும் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். பிறகு அங்கிருந்துப் புறப்பட்டு ராஜ்பவனுக்கு வருகிறார்கள். பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். நியாயமாக, துணை முதல்வராக பதவி எடுத்துக் கொண்டவரும், அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டவரும் தான் ஆளுநருக்கு சால்வையோ, மாலையோ போட்டு, பூங்கொத்து கொடுக்க வேண்டும். ஆனால், ஆளுநர் இவர்களுக்குக் கொடுத்ததை நீங்கள் எல்லாம் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால், ஆளுநரின் வலதுபக்கம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிற்கிறார், இடதுபக்கம் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் நிற்க வைத்து, இருவரின் கைகளைப் பிடித்து சேர்த்து, ஆளுநர் கை கோர்த்து வைக்கிறார்.

இதைத்தானே நான் தொடக்கத்தில் சொன்னேன், பாஜகவை சேர்ந்த மோடி கட்டப் பஞ்சாயத்து நடத்துகிறார் என்று சொன்னது, உண்மையா இல்லையா? அதுதானே நடந்து கொண்டிருக்கிறது. கதிராமங்கலம் மக்கள் இன்றைக்கும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள், நெடுவாசலில் 200 நாட்கள் கடந்தும் போராட்டம் தொடர்கிறது, விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராடி வருகிறார்கள். நீட் தேர்வினால் கிராமப்புற, ஏழை – எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வியை இனி நினைத்துப் பார்க்கவே முடியாத கொடுமைகள் நடக்கின்றன. இதுபற்றியெல்லாம் கேட்க நாதியில்லை, கவலையில்லை. ஆனால், தமிழ்நாட்டின் மொத்த உரிமைகளையும், நம்முடைய சுயமரியாதையை டெல்லியில் கொண்டு சென்று அடகு வைத்திருக்கின்ற, ஒரு அரசு தமிழகத்தில் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது.

எங்கே நான் சென்றாலும், 'எப்போது நடக்கப் போகிறது, எப்போது மாற்ற போகிறீர்கள்? நாங்கள் தெரியாமல் செய்து விட்டோம்' என்று சொல்கிறார்கள். இங்கே மட்டுமல்ல, எந்த மாநிலம் சென்றாலும், ஏன் அண்மையில் நான் இலண்டன் சென்றிருந்தேன், அங்கு கூட நம்முடைய திமுக மற்றும் எங்களைப் பார்த்து கேட்கின்ற கேள்வி, 'எப்பொழுது விடிவுகாலம் வரும்?'.

இப்படிக் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம் அப்பொழுதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன், ஒரு நல்ல வாய்ப்பு வரும், விரைவில் வரும், அதைத்தான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். நேற்று கூட சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் துரைமுருகன், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து, நான் ஏற்கெனவே எழுதியுள்ள கடிதத்தை வலியுறுத்தும் வகையில், மேலும் ஒரு கடிதத்தை வழங்கிவிட்டு வந்திருக்கிறார்கள். ஜனநாயக அடிப்படையில் நிச்சயம் அதனை ஏற்றுக்கொண்டு ஆளுநர் ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.

இன்று மாலை சட்டமன்ற உரிமைக்குழு கூட்டம் நடக்கின்றது. எதற்காக அவசர அவசரமாக கூடுகிறது என்றால், கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், இந்த ஆட்சியில் நடக்கும் அவலங்களை எல்லாம் பட்டியலிட்டுப் பேசினேன். அப்படி பேசுகின்ற நேரத்தில், தடை செய்யப்பட்டிருக்கும் குட்கா போதைப்பொருளை சென்னை மற்றும் சுற்றியிருக்கும் புறநகர் பகுதிகளில், தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் முழுவதும் திருட்டுத்தனமாக நடைபெற்று வருகிறது. ஆகவே, இதனைத் தடுக்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டுமென சொல்வதற்காக, ஜனநாயகரீதியில் குறிப்பிட்டுச் சொன்னேன். இதற்கு என்ன ஆதாரம் எனக் கேட்டபோது, கையில் இருந்த குட்கா பொட்டலங்களை எடுத்துக் காண்பித்தேன். எங்களோடு வந்த சட்டமன்ற உறுப்பினர்களும் காண்பித்தார்கள்.

ஆதாரம் என்று கேட்கிறபோது ஆதாரத்தை காண்பிப்பது தானே முறை? இதனை விற்றது நாங்களா? வெளியில் விற்கப்பட்டு வருகிறது. மேலும், இதனை விற்பதற்கு துணை நின்று கொண்டிருப்பது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர் என்று ஆதாரங்களோடு செய்திகள் வந்திருக்கிறது. டி.ஜி.பி ராஜேந்திரனுக்கு மாமூல் வழங்கப்பட்டுள்ளது என ஆங்கில ஊடகமான டைம்ஸ் நவ் செய்தியில் ஆதாரம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத் தான் நாங்கள் சொல்கிறோம்.

40 நாட்களுக்கு முன்பு, ஜூலை 19 ஆம் தேதி இதனை சட்டமன்றத்தில் நாங்கள் காட்டினோம். இது ஒன்றும் தவறல்ல, ஒருவேளை வாதத்துக்காக தவறென்றே எடுத்துக் கொண்டாலும், நடவடிக்கையை 20, 21, ஏன் 30 தேதிகளில் எல்லாம் எடுக்காமல் 40 நாட்கள் கழித்து உரிமை மீறல் குழு இன்று கூட்டப்படுகிறது. என்ன காரணம் தெரியுமா? ஏற்கெனவே 19 பேர் இல்லாமல் மெஜாரிட்டியை இழந்து உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. இப்பொழுது கோமா நிலைக்குச் சென்று விட்டது. இந்தநிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேரை நீக்கிவிட்டால், தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்ளலாம் என கொல்லைப்புறமாக ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்கின்ற, குறுகிய புத்தியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு.

மேலும், இந்த உரிமைமீறல் குழுவில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். எதிர்க்கட்சியான நாமும், காங்கிரஸ் 1 என 6 பேர் தான் இருக்கிறோம். மெஜாரிட்டி அதிமுக தான். இப்பொழுது தினகரன் அணியிலிருந்து 4 பேர் வெளியில் வந்துவிட்டார்கள். அந்தத் தீர்மானத்தைக் கூட அவர்களால் நிறைவேற்ற முடியாது. அப்படி நிறைவேற்றி, சட்டமன்றத்திற்கு கொண்டு வந்தால் கூட, அங்கிருந்து வெளியேறியவர்களின் கணக்கு 20, 21 என்பதில் இருந்து, இன்னும் ஒரு வாரத்தில் 30 ஐ தாண்டக் கூடும். இன்னும் கூட செய்தி வந்து கொண்டிருக்கிறது, எண்ணிக்கை 40 ஐ தாண்டப் போகிறது. தைரியமிருந்தால், தெம்பிருந்தால், துணிவிருந்தால் சட்டமன்றத்தை கூட்டுங்கள், அங்கே விவாதிப்போம், வாக்கெடுப்பை நடத்துங்கள், தைரியமிருக்கிறதா?

இப்படிப்பட்ட நிலையில் தான் தமிழகத்தில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சியை கவிழ்க்க அதிமுகவினரே தயாராகி விட்டனர். நிம்மதியான, நேர்மையான, மக்களுக்கான ஆட்சியாக தலைவர் கருணாநிதி தலைமையில் பீடுநடைப் போடக்கூடிய திமுக விரைவில் உதயமாகப் போகிறது'' என்று ஸ்டாலின் பேசினார்.

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x