Published : 08 Aug 2017 12:13 PM
Last Updated : 08 Aug 2017 12:13 PM

தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகள் அறிவுத்திறன் 20 சதவீதம் அதிகரிக்கும்: குழந்தைகள் நலத் துறை இயக்குநர் தகவல்

தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு அறிவுத்திறன் 20 சதவீதம் அதிகரிக்கும் என்று குழந்தைகள் நலத் துறை இயக்குநர் மற்றும் துறை தலைவர் டாக்டர் கே.மதியரசன் தெரிவித்தார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா நேற்று நடைபெற்றது. டீன் டி.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் ஷீலா மல்லிகாராணி முன்னிலை வகித்தார். இதில் டாக்டர் கே.மதியரசன் பேசியதாவது:

உலக சுகாதார நிறுவனம், யுனிசெப் மற்றும் மத்திய அரசு எவ்வளவோ விழிப்புணர்வு செய்தும் 40 சதவீதம் பெண்களே 6 மாதம் வரை மட்டுமே குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் கரு உண்டான நாளில் இருந்து முதல் ஆயிரம் நாட்கள் குழந்தைகளுக்கு ‘கோல்டன் தவுசன்ட்ஸ் டே’ என்கிறது. இந்த நாட்களில்தான் 80 முதல் 90 சதவீதம் வரை குழந்தையின் மூளை வளர்ச்சி நடைபெறுகிறது.

மூளை வளர்ச்சி

அதனால், முதல் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது மிக முக்கியமானது. பிறக்கும்போது ஒரு நிறைமாத குழந்தையின் சராசரி எடை 3 கிலோ. இதில் 70 சதவீதம் குழந்தையின் மூளை எடையாக இருக்கிறது. இதற்குப் பிறகே 5 முதல் 10 சதவீதம் மூளை வளர்ச்சி நடக்கிறது.

விஞ்ஞான ஆராய்ச்சியில் குழந்தைகளின் அறிவுத்திறனை சோதனை செய்தபோது தாய்ப்பால் குடித்த குழந்தைகளின் அறிவுத்திறன் 10 முதல் 20 சதவீதம் அதிகமாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு

பிறந்த ஒரு மணி நேரத்தில் இருந்தே குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்துவிட வேண்டும். ஆனால், சில குழந்தைகளுக்கு முதல் 3 நாட்கள் வரை 3 மில்லி முதல் 5 மில்லி வரையே பால் கிடைக்கும். இந்த பாலே போதுமானது. ஆனால், இந்த விழிப்புணர்வு இல்லாமல் குழந்தைகளுக்கு பால் குறைவாக கிடைப்பதாக சொல்லி ஊற்றுப்பால் கொடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர். ஆரம்பத்தில் குறைவாக கிடைத்தாலும் குழந்தைகள் குடிக்க குடிக்க தாய்ப்பால் அதிகமாக சுரக்க ஆரம்பித்துவிடும்.

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கான ப்ரோலக்ட்டின் ஹார்மோன் தாய்ப்பாலில்தான் கிடைக்கிறது. டின் பால், பாக்கெட் பால் கொடுக்க ஆரம்பித்தால் குழந்தைகள் தாய்ப்பால் குடிக்க ஆர்வம் காட்டாது. தாய்ப்பால் சுரப்பதும் நின்றுபோய்விடும். சிலர் குழந்தைகள் ஒல்லியாக இருப்பதாகக் கூறி மாட்டுப்பால் கொடுக்கின்றனர்.

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு மாட்டுப் பாலை எந்த சூழலிலும் கொடுக்கக் கூடாது. 3 மாதங்களுக்கு மேல் குழந்தைகளுக்கு தலை நிற்கும். திரும்பி எல்லோரையும் பார்க்க ஆரம்பிக்கும். நம்மை வெளியுலகத்துக்கு தூக்கிச் செல்ல துடிக்கும்.

அரவணைக்க நினைக்கும். இதற்காக குழந்தைகள் அழும். கொசு கடித்தாலும், சிறுநீர் கழித்தாலும் குழந்தைகள் அழும். எதற்கு அழுதாலும் குழந்தைகளுக்கு பால் போதவில்லை என நினைத்து சில பெற்றோர் டின் பால், பாக்கெட் பால் கொடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர். இப்படியாக முதல் ஒரு மாதத்தில் முக்கால் கிலோ முதல் அரை கிலோ வரை எடை கூடினாலே போதும். ஆரோக்கியமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னாள் பேராசிரியர்கள் டி.ராஜகோபால், டாக்டர் வி.சவுந்தரராஜன், மெய்கண்டான், நாகேந்திரன் மற்றும் பலர் பேசினர்.

தாய்ப்பால் கிடைக்காமல் ஒரு லட்சம் குழந்தைகள் இறப்பு

டாக்டர் நாகேந்திரன் பேசியது: இந்தியாவில் 1 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் தாய்ப்பால் கிடைக்காமல் இறக்கின்றனர். 36 சதவீதம் குழந்தைகளுக்கு மட்டுமே பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்கின்றனர். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காததால் ஏற்படும் விளைவுகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.90 ஆயிரம் கோடி செலவிடுகிறது. தாய்ப்பால் கொடுக்காமல் நோய் வந்தபின் சிகிச்சை அளிப்பது, செலவழிப்பது தேவையில்லாதது. இந்த செலவினத்தையும், நோய்களையும் குழந்தைகளுக்கு வராமல் தடுக்க தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x