Published : 08 Aug 2017 11:29 AM
Last Updated : 08 Aug 2017 11:29 AM

நடிகர் ரஜினிகாந்துடன் பாஜக எம்.பி. பூனம் மகாஜன் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை பாஜக இளைஞரணி தேசியத் தலைவர் பூனம் மகாஜன் எம்.பி. சந்தித்துப் பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவினர் தற்போது 3 அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். பிளவுபட்ட அதிமுக அணிகள் பாஜகவுடன் இணையப் போவதாக செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், பாஜக இளைஞரணி பேரணியில் பங்கேற்ப தற்காக சென்னை வந்திருந்த அக்கட்சியின் இளைஞரணி தேசியத் தலைவர் பூனம் மகாஜன் எம்.பி., நடிகர் ரஜினிகாந்தை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பூனம் மகாஜன், ‘நான் சந்தித்ததில் மிக எளிமையான ஜோடி ரஜினிகாந்த் - லதா தம்பதிதான்’ என்று குறிப்பிட்டுள்ளதுடன், ரஜினிகாந்த் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களையும் பதிவேற் றம் செய்துள்ளார்.

கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘‘அரசியலுக்கு வர எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன். அவ்வாறு வந்தால் உண்மையானவனாக இருப்பேன். பணம் சம்பாதிக்கும் நோக்கில் வருபவர்களை சேர்த்துக்கொள்ள மாட்டேன். அதுபோன்ற எண்ணம் உள்ளவர்களுடன் சேர்ந்து பணியாற்றவும் மாட்டேன்’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி யாகிவிட்டதாக கூறப்பட்டது. அவரை வரவேற்று மாநிலம் முழுவதும் ரசிகர்கள் சுவரொட்டி ஒட்டினர். ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்று விவாதங்களும் நடந்தன. ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் அழைப்பு விடுத்தன.

பாஜகவும் தங்கள் கட்சியில் இணையும்படி ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்தது. அதுபற்றி ரஜினி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. பாஜகவில் சேரமாட்டேன் என்றும் கூறவில்லை.

அதே நேரத்தில் பாஜக தரப்பில் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இம்மாத இறுதியில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சென்னை வரஉள்ளார். அப்போது அவர் ரஜினியை சந்தித்துப் பேசுவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஜினியை பாஜக இளைஞரணி தேசிய தலைவர் பூனம் மகாஜன் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று பாஜக வட்டாரம் தெரிவித்தாலும் அமித் ஷா சந்திக்க வருவது குறித்து ரஜினியுடன் பூனம் ஆலோசனை நடத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x