Published : 21 Aug 2017 09:57 AM
Last Updated : 21 Aug 2017 09:57 AM

கோவை ஸ்மார்ட் சிட்டி ‘சிஇஒ’ நியமனத்தில் விதிமீறல் இல்லை

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் திருத்தப்பட்ட அரசாணை அடிப்படையில்தான், கோவைக்கான தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) நியமனம் நடந்ததாக கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான தலைமை செயல் அதிகாரியாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராஜுவின் மகள் ஆர்.சுகன்யா தேர்வு செய்யப்பட்டார். விதிமுறைகளைத் தளர்த்தி இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கு மறுப்பு தெரிவித்து, கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் முதன்மை செயல் அலுவலர், முதன்மை நிதி அலுவலர், நிறுவனச் செயலர் பணியிடங்களை உருவாக்க நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை பிறப்பித்தது.

மார்ச் 15-ல் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு, 28 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 15 பேர் நேர்காணலில் பங்கேற்றனர். ஆனால், அரசாணையின்படி 15 ஆண்டு பணி அனுபவம் இல்லாததால் யாரும் அதில் தேர்வாகவில்லை.

இதனிடையே தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பெறும் அனைத்து மாநகராட்சிகளுக்கும் (சென்னை நீங்கலாக) பொருந்தும் வகையில் சிஇஓ பணியிட நியமனத்துக்கு 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டுமென அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டது.

மீண்டும் ஜூலை 18-ல் விளம்பரம் வெளியிடப்பட்டு, 21 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆக.1-ல் 18 பேர் நேர்காணலில் பங்கேற்றனர். அதில் உரிய கல்வித்தகுதி, 3 ஆண்டுகள் பணி முன் அனுபவம் கொண்ட ஆர்.சுகன்யா தேர்வானார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் மத்திய அரசின் வழிகாட்டுதலில் செயல்பட்டாலும், அதன் சிஇஓ பணிக்கான தகுதிகள் மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்டன. 15 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றவர்கள் இல்லாததால்தான், முன் அனுபவத்தை 3 ஆண்டுகளாகவும், தொகுப்பூதியத்தை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.1 லட்சமாகவும் குறைத்து திருத்திய அரசாணையை மாநில அரசு வெளியிட்டது. அதற்கு உட்பட்டே இந்த நியமனம் உள்ளது. விதிமீறல் நடைபெறவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x