Published : 20 Aug 2017 09:53 AM
Last Updated : 20 Aug 2017 09:53 AM

அதிமுக ஆட்சி கலைய வாய்ப்புள்ளது: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கணிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் தீரர் சத்தியமூர்த்தி மற்றும் மூப்பனார் ஆகியோர் பிறந்த நாள் விழா காங்கிரஸ் மற்றும் தமாகா சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.

சுதந்திரப் போராட்ட தியாகியும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான தீரர் சத்தியமூர்த்தியின் பிறந்த நாளும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் தமாகா நிறுவனருமான ஜி.கே. மூப்பனாரின் பிறந்த நாளும் நேற்று கொண்டாடப்பட்டது. அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இருவரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் உள்ள தீரர் சத்தியமூர்த்தி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு முக்கிய காரணம் பாஜகதான். கட்சியை உடைத்து குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல்களில் பயன்படுத்திக் கொண்டனர். வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களை பயன்படுத்திக் கொள்ளவே தொடர்ந்து பிரச்சினைகளில் ஈடுபடுகின் றனர்.

முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பு என்பது மக்கள் நலனுக்காகவோ அல்லது தமிழகத்தின் நலனுக்காகவோ நடக்கவில்லை. பதவிக்காக நடந்து வருகிறது. 3 கோஷ்டிகளாக இருப்பதால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கலைவதற்கான வாய்ப்புள்ளது.

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தது நான்தான். அந்த இல்லம் அவர் சினிமாவில் இருந்தபோது சம்பாதித்த சொத்து. அவரது சொந்த அண்ணன் மகன், மகள் ஆகியோருக்கு உரிய நஷ்டஈடு வழங்கி வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

எனது மகள் திருமணம் செப்டம்பர் 3-ம் தேதி நடக்கிறது. அதற்கான அழைப்பிதழை வழங்குவதற்காக நடிகர் ரஜினியை சந்தித்தேன். அவரிடம் எந்தவித அரசியலும் பேசவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதேபோல மூப்பனாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, தேனாம்பேட்டை தமாகா அலுவலகத்தில் மூப்பனாரின் உருவப்படத்துக்கு கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வுகளில் கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x