Published : 10 Aug 2017 05:25 PM
Last Updated : 10 Aug 2017 05:25 PM

ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியா?- கே.பி.முனுசாமி பதில்

 

எடப்பாடி தரப்பில் இருந்து பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி பதிலளித்துள்ளார்.

அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியைக் கட்டுப்படுத்தாது என்று ஈபிஎஸ் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கழக சட்ட விதிகளின்படி, டிடிவி தினகரனின் துணைப் பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிரீன்வேஸ் இல்லத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, ''ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கழக வளர்ச்சிப்பணிகள் பற்றியும், தமிழக மக்களின் அன்றாடத் தேவைகளை அரசுக்கு எடுத்துச் சொல்வது குறித்தும் ஆலோசனை நடத்தினோம்.

ஏற்கெனவே நாங்கள் விடுத்துள்ள கோரிக்கையின்படி, ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். சசிகலா மற்றும் குடும்பத்தினர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். இந்த இரு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் இணைப்பு பற்றிப் பேசப்படும்.

கட்சியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர் தினகரன். அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லை. அதனால் அவருடன் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. முன்னதாக எடப்பாடி அணியினர் அவர்களை ஏற்றுக்கொண்டிருந்த சூழலில், தற்போது வெளியேற்றுவதாகச் சொல்கின்றனர்.

இப்போதுதான் அவர்கள் விழித்திருக்கிறார்கள் என்று கருதுகிறோம். ஆனால் இந்த விழிப்பு தினகரனோடு நின்றுவிடாமல், சசிகலா குடும்பம் முழுவதும் வெளியேற்றப்பட்டால் அவர்களை நிச்சயம் பாராட்டுவோம்.

ஆனால் எங்களின் இரு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இணைப்புக்கான நிலைப்பாட்டை எடுப்போம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஓபிஎஸ்ஸுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கொள்கையோடு இருக்கும் ஒரு தலைவருக்கு, நாட்டு மக்களும், கட்சியும் நலமுடன் இருக்க வேண்டும் என்று எண்ணும் தலைவருக்கு, பதவிகள் கொடுத்து சரிசெய்து விட முடியும் என்று யாரும் எண்ணக்கூடாது.

எடப்பாடி தரப்பில் இருந்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. அவ்வாறு நடத்தினால் நிச்சயம் உங்களிடம் சொல்வோம். அதே நேரத்தில் பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படுகிறது என்ற யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது'' என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x