Published : 26 Aug 2017 02:57 PM
Last Updated : 26 Aug 2017 02:57 PM

சுங்கத்துறையின் இணையதளத்தை சரிசெய்ய உடனடி நடவடிக்கை தேவை: வாசன்

 

சுங்கத்துறையின் இணையதளம் செயல்படாமல் இருந்தால் அதனை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அத்துறையின் கடமை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சரக்குகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு இறக்குமதியாகும் சரக்குகள் ஆகியவற்றிற்கான ஆவண பரிவர்த்தனைகள் சுங்கத்துறையின் இணையதளம் மூலம் நடைபெற்று வருகின்றன.

கடந்த 4 நாட்களாக இந்த இணையதளம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சரியாக இயங்கவில்லை. இதனால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் சுங்கத்துறை முகவர்கள், வர்த்தகர்கள் தங்களது ஆவணங்களை இனையதளத்தில் பதிவு செய்ய முடியாமல் இருப்பதால் சரக்குகளை ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்ய முடியவில்லை. இதனால் சரக்குகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படாமல் துறைமுகங்களில் தேக்கமடைந்துள்ளன.

இவ்வாறு சரக்குகள் குறித்து 24 மணி நேரத்திற்குள் ஆவணப் பரிவர்த்தனை செய்ய முடியாமல் போனால் முதல் நாள் தாமதத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. முதல் நாளைத் தொடர்ந்து அடுத்து வரும் நாட்களிலும் சரக்குகள் குறித்து ஆவணப் பரிவர்த்தனை செய்யமுடியாமல் போனால் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இது ஏற்புடையதல்ல.

இத்தகைய ஆவணப் பரிவர்த்தனைகள் செய்ய முடியாமல் இருப்பதால் துறைமுகங்களுக்கு வர வேண்டிய சரக்குகள் வராமல் இருக்கின்றன. இதனால் வெளிநாடுகளுக்கு செல்லும் கப்பல்களுக்கு சரக்குகள் வராமல் இருப்பதால் கப்பல்கள் சரக்குகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

மேலும் நம் நாட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடைபெறும் அனைத்து இடங்களிலும் இதே போன்ற பிரச்சினை கடந்த 4 நாட்களாக இருப்பதால் அரசுக்கும், சரக்குகளை கையாளும் நிறுவனங்களுக்கும், இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கும் வருவாய் கிடைக்கவில்லை.

கடந்த 4 நாட்களாக சரக்குகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகாமல் இருப்பதால் லாரி ஓட்டுநர்கள். கூலித்தொழிலாளிகள் என பல்வேறு தரப்பினர் பொருளாதார ரீதியாக பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சுங்கத்துறையின் இணையதளம் செயல்படாமல் இருந்தால் அதனை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அத்துறையின் கடமை. மேலும் அந்த இணையதளம் சரியாக பயன்பாட்டிற்கு வரும் வரை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாகும் சரக்குகளுக்கு எந்தவிதமான கட்டணமும் தண்டத் தொகையாக வசூல் செய்யக் கூடாது.

சுங்கத்துறையின் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறுகளுக்கு வர்த்தகர்கள், முகவர்கள் பொறுப்பு ஏற்க முடியாது. எனவே நம் நாட்டின் பொருளாதர வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் கப்பல்துறை அமைச்சகமும், சுங்கத்துறையும் இணைந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் தங்கு, தடையின்றி செயல்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x