Published : 31 Aug 2017 09:51 AM
Last Updated : 31 Aug 2017 09:51 AM

ஓரிரு நாளில் அடுத்தகட்ட நடவடிக்கை: தினகரன் அறிவிப்பு

முதல்வர் கே.பழனிசாமி தாமாக முன்வந்து பதவி விலக அவகாசம் கொடுத்துள்ளோம். ஓரிரு நாளில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம் என்று அதிமுக (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தன்னை முதல்வராக்கிய பொதுச் செயலாளரை கட்சியை விட்டு நீக்குவேன் என்கிறார். சுயலாபத்துக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நபர், துரோக சிந்தனையுடைய ஒருவர் எப்படி தமிழக மக்களுக்கு நல்ல முதல்வராக இருக்க முடியும்? கொஞ்சம்கூட மனதில் ஈரமில்லாமல் பதவி வெறியின் காரணமாக முதல்வர் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பவரை மாற்ற வேண்டும் என்பதுதான் எம்எல்ஏக்கள், கட்சித் தொண்டர்களின் கோரிக்கை. அதனால் அவராக பதவி விலக வேண்டும் என்பதற்காக நேரம் கொடுத்துள்ளோம். நீங்கள் நடத்திய கூட்டத்தில் 77 எம்எல்ஏக்கள் மட்டும்தான் கலந்துகொண்டார்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

‘ஸ்லீப்பர் செல்லாக’ எங்களது எம்எல்ஏக்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவராக வெளியே வருவார்கள். ஜெயலலிதா உருவாக்கிய இந்த அரசாங்கம், சசிகலா உதவியதால்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாங்கள் உருவாக்கிய அரசுக்கு எங்களால் இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் நேரம் கொடுக்கிறோம். எனவே, முதல்வரும், இரட்டை இலையை முடக்கக் காரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும். அவர்கள் அவ்வாறு பதவி விலகினால்தான் இப்பிரச்சினை முடிவுக்கு வரும். நாங்கள் எடுக்கும் முயற்சியில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

ஆளுநரிடம் எங்கள் எம்எல்ஏக்கள் விடுத்துள்ள கோரிக்கை மீது அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று காத்திருக்கிறோம். ஓரிரு நாட்களில் எம்எல்ஏக்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பேன். அதிமுகவில் பொதுச் செயலாளர் மட்டுமே பொதுக்குழுவைக் கூட்ட முடியும். இப்போது அவரது சார்பில் செயல்படும் துணைப் பொதுச் செயலாளராகிய நான்தான் பொதுக் குழுவைக் கூட்ட முடியும். அவ்வாறு இல்லாமல் இவர்கள் கூட்டும் பொதுக் குழுக் கூட்டம் செல்லாது. அணிகள் இணைந்தால் கட்சிப் பொதுச் செயலாளர் நியமனமும், அவரது நியமனமும் செல்லும். சட்டசபையைக் கூட்டுவது தொடர்பாக எதிர்கட்சிகளிடம் ஆளுநர் கூறியது பற்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்போம். சட்டப்பேரவைத் தலைவர் அளித்துள்ள நோட்டீஸுக்கு எங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று விளக்கம் அளிப்பார்கள்

இவ்வாறு தினகரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x