

ஊட்டச்சத்துக்கான அரசின் உதவித் தொகை கர்ப்பிணிகளுக்கு கிடைப்பதில் பல்வேறு குளறுபடி கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சத்துக்குறைவு பிரச்சினை ஏற்படுவதுடன், சிசு மரணங்கள் நிகழ்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பச்சிளங் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில், கடந்த வாரம் 12 குழந்தைகள் இறந்தன. மேலும் 2 குழந்தைகள் இறந்தே பிறந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் மருத்துவக் கல்வி இயக்குநர் கீதா லட்சுமி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளின் மரணத்துக்கு சத்துக்குறைபாடு மட்டுமின்றி, குறைப் பிரசவம், வலிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் காரணமாக கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு அரசு மருத்துவமனைக்கு வரும் கிராமப்புற கர்ப்பிணிகளின் ஊட்டச் சத்துக் குறைவே காரணம் என தெரிய வந்துள்ளது.
கிராமப்புற கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காததால், அவர்கள் தங்களுக்கு கிடைத்ததை உண்டு, குழந்தைகளைப் பெற்றெடுக்கும் சூழல் உள்ளது. இந்நிலை குறித்து, ஏற்கெனவே அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்ததால், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கர்ப்பிணிகளுக்கான உதவித் தொகைத் திட்டத்தின் மூலம், பிரசவத்துக்கு முன் 3 மாதங்கள், பிரசவத்துக்குப் பின் 3 மாதங்கள் என மொத்தம் 6 மாதங்களுக்கு, தலா இரண்டாயிரம் ரூபாய் மாதந்தோறும் அரசின் மூலம் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம், சமூக நலத்துறை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கிராம செவிலியர்கள் மூலம் அமலாகிறது. கிராம செவிலியர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக கர்ப்பிணிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் நிலையை அறிந்து, தேவையான மருத்துவ, ஊட்டச் சத்து ஆலோசனைகளை வழங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான இடங்களில் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச் சத்து உதவித் தொகை கிடைக்காத சூழல் உள்ளது.
இதுகுறித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி கூறியதாவது:
சமூக நலத்துறையின் பெரும் பாலான திட்டங்களின் பலன் களைப் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு பிரசவத்துக்கு முன்பே 3 மாதங்களுக்கு ஊட்டச் சத்து பெற, உதவித் தொகை தர வேண்டும். ஆனால், பெரும்பாலானோருக்கு குழந்தை பிறந்து பள்ளிக்குப் போன பிறகும் அந்தத் தொகை கிடைப்பதில்லை. அதனால்தான், கிராமப்புறக் கர்ப்பிணிகள் சத்தில் லாமல் குறைப் பிரசவமாகவும், எடைக் குறைவு போன்ற பல குறைகளைக் கொண்ட குழந்தை களையும் பெற்றெடுக்கிறார்கள்.
இதுகுறித்து, எங்கள் சங்கத் தினர் மூலம், பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் முதல் உள்ளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை அதிகாரி வரை, மனு அளித்து வருகி றோம். பெயரளவில் திட்டம் வைத் திருப்பதை விட உரிய முறையில் கர்ப்பிணிகளுக்கு பிரசவத்துக்கு முன்பே பணம் சென்று சேருவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற குறைப்பிரசவம் மற்றும் சிசு மரணங்களை தடுப்பது கடின மாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்ப்பிணிகள் உதவித் தொகை பெற வேண்டுமென்றால், அவர்கள் அரசு மருத்துவமனையில் குழந் தையைப் பிரசவிக்க வேண்டும். ஒன்றிய அலுவலகங்களுக்கு சென்று பதிவு செய்ய வேண்டும். உள்ளூர் செவிலியர்களை தேடி அவர்களுக்காக காத்திருக்க வேண்டும். உதவித் தொகைக்கான காசோலையைப் பெற மருத்துவ மனையை விட அதிகமாக தாய் சேய் நல மையங்களுக்கு அலைய வேண்டும் என்ற சூழல் உள்ளது.
இதுகுறித்து சமூக நலத் துறையின் மாவட்ட அதிகாரி களிடம் விசாரித்தபோது, “கர்ப்பிணிகளுக்கான உதவித் தொகை வழங்குவதில் உள்ளூரி லுள்ள சில பஞ்சாயத்து பிரதிநிதி கள், சட்ட விரோத ஏஜெண்டுகள் தலையிடுவதால், பல பிரச் சினைகள் ஏற்படுகின்றன. அதனால் உரியவர்களுக்கு பணம் சென்று சேர வேண்டுமென்பதால், கால தாமதமானாலும், நேரடியாக பஞ்சாயத்து ஒன்றிய அலுவலகங் களுக்கு வரச் சொல்கிறோம். தற்போது அரசு மகப்பேறு மருத்துவமனைகளிலேயே இந்தத் திட்டத்துக்கான பதிவேடுகள் வைத்துள்ளோம். அங்குள்ள செவிலியர் இதற்கு வழிகாட்டுவார்” என்றனர்.